Tuesday, September 20, 2011

எஸ்.ஆர்.எம் கொள்ளையடிக்கும் கதை

"நாடு நலம் பெற, கையூட்டுகளை களைய;
ஊழலை ஒழித்து, நாட்டில் முதலீட்டுகளை பெருக்க..."

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவனர் திரு. பச்சைமுத்து தொடங்கிய இந்திய ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதி தான் நீங்கள் மேலே படித்தது. புதிய தலைமுறை,வார இதழ்,தொலைக்காட்சியும் இவருடையது தான்.

"தேசத்தின் திருப்புமுனை...மாற்றத்தின் ஏவுகணை" என்று தன்னை வர்ணித்துக் கொள்ளும் கட்சி நடத்தும் பல்கலைக்கழகத்தின் அழகென்ன? தேர்தல் அறிக்கையில் கண்ட கனவுகள், குறைந்தபட்சம் இவர்களின் பல்கலைக்கழகத்திலேனும் நிறைவேறியதா? பார்க்கலாம் வாருங்கள்.....

சமீப வருடங்களில் எஸ்.ஆர்.எம் தனது தரத்தை உயர்த்திக் கொண்டதில் அதில் படிக்க விரும்பும் மாணவர்கள் இடையே போட்டா போட்டி... யார் அதிக நன்கொடை (?) தருவதென்று ! விலைவாசியைப் போல் இந்த நன்கொடைகளும் கட்டுப்பாடுகளின்றி ஏறிக் கொண்டே போகிறது. இன்றைய சூழலில் அங்கு விற்கப்படும் சில பொறியியல் பிரிவுகளின் விலைப்பட்டியல் இதோ -

கம்யூட்டர் சயின்ஸ் - 2 முதல் 3 லட்சம்
தகவல் தொழில் நுட்பம் - 2 முதல் 3 லட்சம்
மெக்கானிக்கல் - 6 முதல் 7 லட்சம்
எலக்டிரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் - 6 முதல் 7 லட்சம்


மேற்சொன்ன அன்பளிப்பு (?) இங்கு பல வகைகளில் வசூலிக்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வரும் வரை, தனியார் கல்லூரிகளில் தம் பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்களும், மாணவர்களும் காத்திருப்பதில்லை. அதை எஸ்.ஆர்.எம் போன்ற கல்லூரிகளும் விரும்புவதில்லை. பரிட்சை முடிந்த கையுடன் கல்லூரி நிர்வாகிக்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் பேரம் தொடங்கிவிடுகிறது. பேரம் படிந்ததென்றால், ஒரு துண்டுச் சீட்டில் நீங்கள் விரும்பும் பாடப்பிரிவு எழுதித் தரப்படும். இதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியான உடன், நீங்கள் தேர்ச்சி அடைந்திருந்தால் உங்கள் சேர்க்கை உறுதி செய்யப்படும். தேர்வு முடிவுகள் வெளியான உடன் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வழக்கம் போல் நீங்கள் தரும் கையூட்டைப் பொறுத்து விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். கையூட்டிற்கான வாய்வழி ஒப்பந்தம் சுமுகமாய் முடிந்ததென்றால், பல்கலைக்கழகத்தின் காண்டீன் மற்றும் கார் பார்க்கிங் இணைந்திருக்கும் பகுதிக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு மாருதி சுவிப்ட் (Switft) போன்ற ஏதாவது ஒரு காரில் (ஜன்னல்கள் முழுதாய் மறைக்கப்பட்ட என்று சொல்லத் தேவையில்லை) உங்களின் பணம் வசூலிக்கப்படும். இந்தக் காருக்குள் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தவறியும் உங்கள் பணம் கண்காணிப்புக் கேமராக்கள் நிறைந்த நிர்வாக வளாகத்தினுள் வசூலிக்கப்பட மாட்டாது. ஒருவேளை நாளை வருமான வரித்துறையினரின் சோதனை வந்துவிட்டால்...? இந்த ஆதாரங்களை காட்டி நாங்கள் பணமே வாங்கவில்லை என்று சத்தியம் செய்யலாம் இல்லையா?

இந்த பேரங்களை முடித்துத் தருவதெற்கென்றே பல இடைத்தரகர்கள் உண்டு. எஸ்.ஆர். எம் - ல் சேவை செய்யும் பணியாளர்களும் இதில் அடக்கம். இன்னும் சிலரோ குறிப்பிட்ட சில கல்லூரிகளுக்கென தனி ஏஜெண்டுகளாக இருப்பர். அந்தந்த கல்லூரிகளில் மொத்தமாய் இவர்கள் சில சீட்டுகளை குத்தகை எடுத்திருப்பர். அந்த சீட்டுகளுக்கு அவர்கள் சொல்வது தான் விலை. ரூ. 25,000 முதல் கிடைக்கும் கமிஷனுக்காக அங்கு படிக்கும் சில மாணவர்களே இடைத்தரகர்களாய் மாறுவது தான் கொடுமையின் உச்சம்.

பொறியியல் படிப்பிற்கு ஆண்டிற்கு ரூ.2 லட்சம் கட்டணமாய் வசூலிக்கும் பணத்திற்கு ரசீது வழங்கும் எஸ்.ஆர்.எம். இந்த வசூல் வேட்டையை மட்டும் மறந்தும் கணக்கில் காட்டுவதே இல்லை. ஏன்? கொள்ளையடித்த பணத்திற்கு வரி கட்ட வேண்டுமென்பதலா? அல்லது நீங்கள் லஞ்சம் தர வேண்டும் என்பதலா?

கொள்ளைப்புரத்தில் மாணவர்களிடம் வசூலிக்கும் பணம் கையூட்டு அல்லாமல் வேறென்ன? ரகசியமாய் பண வேட்டை நடத்தும் உங்களுக்கு "நாடு நலம் பெற, கையூட்டுகளை களைய..." என்று தேர்தல் அறிக்கையில் சொல்ல என்ன அருகதை இருக்கிறது? நீங்கள் கொள்ளையடித்த பணத்தை அரசியல்வாதிகள் பங்கு போடக் கூடாதென்று தானே நீங்கள் அரசியல் கட்சியே ஆரம்பித்தீர்கள். இந்த வேஷம் எதற்காக? உங்கள் அரசியல் பாதுகாப்பிற்காக மக்களை ஏன் முட்டாளாக்க நினைக்கிறீர்கள்?

கல்வியை யாரும் சேவையாய் செய்ய வேண்டாம். பலர் மாற்றியபடி கல்வி வணிக மயமாகவே இருக்கட்டும். மேலை நாடுகளில் கல்வி பல பல்கலைக்கழங்களில் வணிக மயமாக்கப்பட்டாலும் அவை முறை தவறி செயல்பட்டதில்லை. அவர்கள் அதிக கட்டணம் வசூலித்தாலும், லஞ்சமாய் நன்கொடைகள் கேட்பதில்லை. படிக்கும் போதே மாணவர்களுக்கு கல்லூரிகளில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். இது நம் நாட்டிலும் வந்தால் மாணவர்கள் இடைத்தரகர்களாகும் கேவலமும், நெறி தவறும் அவலும் தடுக்கப்படலாம்.

எந்தக் கல்லூரி பணம் வாங்கவில்லை என்ற வாதம் ஏற்புடையதல்ல....எல்லா கல்லூரியும் வாங்குகிறதென்றால் எல்லோர் மீதும் நடவடிக்கைத் தேவை. இதற்கு சாட்சியங்கள் வேண்டும் என்றால் மாணவ சமுதாயமே நிற்கிறது மௌன சாட்சியாய்.

அதிகாரபூர்வமாய் நாம் புகார் தர வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்க வேண்டாம். முந்தைய ஆட்சியில் கொள்ளையடித்தவர்களை, கொட்டமடித்தவர்களை புகார்கள் ஏதுமின்றி அரசே முன்வந்து நடவடிக்கை எடுப்பது போல், கல்வித்துறையிலும் நடக்க வேண்டும். ஊருக்கே தெரிந்த உண்மை அரசிற்கு தெரியாதா என்ன? மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பாரா?

-- அருண் சிதம்பரம்

நன்றி: http://www.sivajitv.com/srm-university-corrupt-donation-story.html

2 comments:

jaisankar jaganathan said...

அருமையான பதிவு

Anonymous said...

நல்ல அலசல்