Thursday, December 2, 2010

நாவல் அறிமுகம்: சோளகர் தொட்டி

சோளகர் தொட்டி என்கிற தலைப்புடைய இந்த நாவலை என் நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்து,இது ஒரு உண்மை கதை படித்துபார் என்றார்.
எனக்கு இந்த ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டு இருக்கிற நாவல்களை படிப்பதே பிடிக்காது. சரி நண்பர் கொடுத்துவிட்டாரே அதற்காவது தினமும் ஒரு இரண்டு பக்கங்களையாவது புரட்டி விடலாம் என்று படிக்க துவங்கினேன்.படிக்க படிக்க ஆர்வமாகவும்,கோபமும் கூடிக்கொண்டே போனது. நானும் அந்த காட்டுக்குள் ஒரு பார்வையாளனாக பயணம் செய்வதை போன்று உணர்ந்தேன். அந்த அளவிற்கு எதார்த்தத்தை பிரதிபளித்தது இந்த நாவல். சோளகர் தொட்டியை எழுதிய பால முருகன் மிகவும் எளிமையான வார்த்தைகளால் அழகு சேர்த்திருந்தார்.உண்மையான கவிதைகள்,கதைகள்,நாவல்கள்,வர்ணனைகள் யாவும் பெரும்பான்மையான மக்களுக்கு புரியும்படி, எளிமையாகஎழுதினால் தான் அதை படைத்த நோக்கமே பூர்த்தி அடையும்.அதை தான் பால முருகன் செய்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தின் எல்லையில் அழகான மலைகள் மற்றும் காடுகளின் பகுதியில் உள்ளது தொட்டி. இங்கு இயற்கையுடன் பிண்ணி பிணைந்து அமைதியாக வாழ்ந்துவரக்கூடிய “சோளக்கர்” என்ற இனத்தை சார்ந்த பழங்குடிமக்களைப்பற்றியது இந்த நாவல்.

அமைதியாக வாழும் மக்களின் வாழ்க்கையில் வீரப்பன் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் அவர்களை சின்னாபின்னமாக்கும் போலிஸ் பயங்கரவாதத்தைப்பற்றியது தான் இந்த கதை.


இந்த நாவல் இரண்டு பகுதிகளைக்கொண்டது.முதல் பகுதி அமைதியாக இயற்கையுடன் வாழ்ந்துக்கொண்டுருக்கும் அம்மக்களின் பழக்கவழக்கங்களும்,பண்பாடுகளும்,வாழ்க்கை முறைகளும் பற்றிப்படிக்கும் போது புராதான பொதுயுடைமை சமுகத்தின் மிச்சங்களாக தெரிகிறது. அரசு காடுகளில் வேட்டையாடுவது தடை செய்ததால்,காடே தன் வாழ்வு என்று வாழ்ந்த மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்,எப்படி பணக்கார மற்றும் அதிகார வர்க்கத்தால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை விளக்குகிறது இந்த முதல் பகுதி.

இதில் பேதன் மற்றும் ஜோகம்மாள் போன்றவர்கள் தங்கள் நிலத்தை அபகரிக்க நினைக்கும் துரையன் மற்றும் மணியகாரனிடம் பேசும் சொற்கள் அவர்கள் அந்த காட்டையும் மண்னையும் எப்படி நேசிக்கிறார்கள் என்பதை வெளிப்படித்தியுள்ளது.

இதில் விதவைகளைப்பற்றி சொல்ல வேண்டும்.நாகரிகம் அடைந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம். இன்னும் விதவைகளை ஒதிக்கிவைத்துதான் வாழ்ந்துவருகிறோம்.ஆனால் தொட்டியில் யார் வேட்டையாடி எதைக்கொண்டுவந்தாலும் முதல் பங்கு விதவைகளுக்குதான்.பிறகு தான் எல்லோரும் பிரித்துக்கொள்கிறார்கள்.ஒரு பெண் ஒரு ஆண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்,அவனை விட்டு விலகவும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது தொட்டியில். அந்த அளவிற்கு ஆணும்,பெண்ணும் ஜனநாயகத்துடன் வாழ்கிறார்கள்.

இரண்டாவது பகுதி வீரப்பனை பிடிக்க கர்நாடக,தமிழ்நாடு அதிரடிப்படைகளின் பயங்கரவாதச்செயல்களை பதிவு செய்கிறது இந்த நாவல்.

நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் இந்த சமகாலத்தில், ஒரு பகுதியில் சட்டம்,ஒழுங்கு,வனம் பாதுகாப்பு என்கிற பெயரில் அந்த மக்கள் மீது கற்பனை செய்ய முடியாத,மனித தன்மையே இல்லாத பயங்கரவாத செயலை செய்து இருக்கிறது போலிஸ்.விரப்பனுக்கு உதவிகள் இந்த பழங்குடிகள் மூலம் தான் கிடைக்கிறது என்கிற சந்தேகத்திற்காக,அந்த மக்களை மனரீதியாகவும்,உடல்ரீதியாகவும்,பயம்முறுத்துவதற்காக போலிஸ் மேற்கொள்ளும் நடைவடிக்கைகளும்,சித்திரவதைகளும்,படிப்பவர்களின் கண்களை குழமாக்கிவிடுகிறது. இந்த போலிஸ்காரர்களா? மக்களின் நண்பன் என்று நினைக்கும் போது கண்கள் சிவக்கிறது.குசு விட்டாலும் அதை பெரிதுபடுத்தும் ஊடகங்கள், ஓட்டுபொறிக்கி நாய்களும், வீரப்பனுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை,போலிஸ் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு கொடுக்கவில்லை.அவர்களுக்கு ஆதரவாக எதுவுமே செய்யவில்லை.விரப்பனை சுட்டுக்க்கொன்றதற்கு பெரிய விளையாட்டுதிடலில் பாராட்டுவிழாவெல்லாம் எடுத்தார்கள்.யார்யாரோ கலந்துக்கொண்டு ஜனநாயகத்தையும், போலிஸ்காரர்களின் தியாகத்தைப்பற்றியெல்லாம் சொன்னார்கள்.ஆனால் ஒருத்தர் கூட போலிஸ் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று பேசவில்லை. என்னசெய்வது அந்த பழங்குடிகள் மக்களாகவே தெரியவில்லைப்போல இந்த ஓநாய்களுக்கு. போலிஸ்காரர்களுக்கும்,அவர் மனைவி மக்களுக்கு எதாவது பாதகம் வந்தால் அது வன்முறை,தீய செயல் ,தீவிரவாதம் சுட்டே சாகடிக்கலாம்.ஆனால் பழங்குடிகள்,மலைவாழ்மக்கள்,தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் போலிஸ்காரர்களால் வன்முறையால் கொடுமைபடுத்தப்பட்டால்,கொல்லப்பட்டால், அது ஜனநாயகம் பாதுகாப்புக்கான செயல்கள்.

ஒரு வீரப்பனை தேடியே ஒரு இனமக்களை சித்திரவதைச்செய்தும்,அவர்களை பைத்தியகாரர்களாகவும்,ஊனமுற்றவர்களாகவும் மாற்றிவிட்ட இந்த போலிஸ் பயங்கரவாதம்.இன்று காட்டுவளங்களை கொள்ளையடித்து முதலாளிகளுக்கு கொடுக்க மாவோயிஸ்ட் என்று சொல்லி இந்தியாவின் பழங்குடிகள்,மலைவாழ்மக்கள்மற்றும் சில தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தொடுத்திருக்கும் அரசு பயங்கரவாத என்ற போர் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தாலே நெஞ்சு பதப்பதைக்குது.
ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் ஒவ்வொருவரும் இந்த நாவலை படிக்கவேண்டும்.
இந்த அரசு,அரசாங்கம் யாருக்காக இயங்குகிறது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

மக்களுக்காகதான் அரசு
அரசுக்காக மக்கள் இல்லை
இதை மக்கள் உணரும் நேரம் நிச்சயமாக கிழக்கு சிவந்தே தீரும்