Friday, September 16, 2011

சாதி பிளவுகள் உள்ள இந்தியாவில் உழைக்கும் மக்களின் வர்க்க போராட்டம் சாத்தியமா?


இந்தியாவில் வருணாசிரம பார்ப்பனிய இந்து மதவெறியும் அதன் அடிப்படையில் சாதிய ஆதிக்கமும் நிலவுவதையே சட்டபூர்வ போலி கம்யூனிஸ்டுகள் மறுத்து வருகிறார்கள். இந்துமத வெறியையும், மேல்சாதி ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவதற்குப் பதில் சாதி, மத ஒருமைப்பாடு மற்றும் மதச் சார்பின்மை என்ற சமரசவாதங்களை வைக்கின்றனர். இதற்குக் காரணம் அக்கட்சிகளின் தலைமையே இந்து மதவெறி மற்றும் மேல்சாதி ஆதிக்க நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அதேசமயம் சாதி இனவாதக் குழுக்களும் பிரமுகர்களும் வேறொரு தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். இந்தியாவிலுள்ள வருணசிரம பார்ப்பனிய இந்துமதம் மற்றும் சாதிய அமைப்பு மார்க்சிய லெனினிய வர்க்கக் கண்ணோட்டத்துக்கு விதிவிலக்கானது; இந்தியாவில் மட்டுமே தனிச்சிறப்பாக நிலவக்கூடியது என்கிறார்கள். இதுவும் ஏற்கக் கூடியதல்ல. முதலாளித்துவத்துக்கு முந்திய சமூக அமைப்புகள் உற்பத்தி முறைகளை ஆய்வு செய்தபோது அடிமைச் சமுதாயத்துக்கு ரோமானியப் பழம்பண்டு சமூகத்தையும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்துக்கு ஜெர்மானிய நிலவுடைமை சமூகத்தையும் வரைவிலக்கணங்களாக மார்க்சு எடுத்துக் கொண்டு பகுப்பாய்வு செய்தார். அவற்றிலிருந்து முதலாளித்துவத்துக்கு முந்திய சமூக அமைப்புகள் உற்பத்தி முறைகளின் பொது விதிகளைத் தொகுத்து தனது வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை வரையறுத்தார். இந்தப் பொதுவிதிகள் உலகிலிருந்த எல்லா சமூக அமைப்புகளுக்கும் பொருத்தமாகவே உள்ளன; அதேசமயம் அப்பொது விதிகள் ஒவ்வொரு சமூக அமைப்பின் தனிச்சிறப்பான கூடுதலான இயல்புகளை மறுப்பவையோ எதிரானவையோ அல்ல.

மார்க்சிய வர்க்கக் கண்ணோட்டத்தை அதன் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தைப் பிரயோகிக்கும் போது ஒவ்வொரு நாட்டுப் புரட்சியாளர்களும் அதன் பொது விதிகளையும், அந்நாட்டின் தனிச்சிறப்பான அம்சங்களையும் சேர்த்தே பார்க்க வேண்டும் என்று தான் மார்க்சு முதல் மாவோவரை வலியுறுத்தினார்கள். ஆனால் இங்குள்ள சட்டபூர்வப் போலி கம்யூனிஸ்டுகளும் சரி, சாதிஇனவாதக் குழுக்களும், பிரமுகர்களும் சரி பொதுவிதிகள் அல்லது தனிச்சிறப்பான அம்சங்கள் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டுமே பார்க்கிறார்கள். மற்றதை மறுக்கிறார்கள்.

வருணாசிரம பார்ப்பனிய இந்து வெறியும் அதன் அடிப்படையிலான சாதிய அமைப்பும் நமது நாட்டின் தனிச்சிறப்பான அம்சங்கள்; அவற்றை எதிர்த்து ஒழித்துக் கட்ட வேண்டும். இதை ஏற்றுக் கொள்பவர்கள் மத்தியிலேயே மூன்று தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக, சாதி இனவாதக் குழுக்களும் பிரமுகர்களும், நமது நாட்டில் வர்க்கங்களே சாதி வடிவங்களில் உள்ளன; எனவே சாதி ரீதியிலான புரட்சிதான் சரியான தீர்வாகும் என்கிறார்கள். குறிப்பாக, நமது நாட்டைப் பொருத்தவரை தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள்தான் பாட்டாளி வர்க்கமாக உள்ளனர்; இவர்களின் சர்வாதிகாரத்தை நிறுவுவதே புரட்சியின் கடமையாகும்; இன்னும் பிற்பட்ட சில சாதிகளை நட்பு சக்திகளாகக் கருதி ஐக்கிய முன்னணி அமைத்து பார்ப்பன பனியா சாதிகளை எதிர்த்துப் புரட்சி நடத்த வேண்டும் என்கின்றனர். இவர்களிலே ஒரு பிரிவினர் ஆயுதப் போராட்டத்தின் மூலமும், இன்னொரு பிரிவினர் இட ஒதுக்கீட்டின் மூலமும் இந்தப் புரட்சியைச் சாதிக்க வேண்டும் என்கின்றனர்.

ஆனால், பார்ப்பனபனியா கும்பல் தவிர வேறுபிற மேல்சாதிகளிலும், குறிப்பாக பிற்பட்ட சாதிகளிலும் நிலப்பிரபுத்துவ தரகு அதிகார முதலாளி வர்க்கங்களின் பிரிவினர் உள்ளனர். இந்தச் சாதிகளிலும் உழைக்கும் வர்க்கப் புரட்சிப் பிரிவினர் உள்ளனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சாதிகளிலும் ஊசலாடும் இடைத்தர சமூகத்தட்டு மக்கள் பிரிவினர் உள்ளனர். எனவே, சாதிய ரீதியிலான புரட்சி வெறும் வாய்ச்சவடாகவே இருக்கிறது.

இரண்டாவதாக, வர்க்கப் போராட்டத்தையும் சாதியப் போராட்டத்தையும் இணைத்துப் புரட்சி செய்ய வேண்டும் என்று சில போலிப் புரட்சிக் குழுக்களும் சில மார்க்சிய லெனினியக் குழுக்களும் சில ஆண்டுகளாகவே கூறிவருகின்றன. ஆனால், இதையும் எந்த அடிப்படையில், எந்த முறையில் சாதிப்பது என்று அக்குழுக்கள் கூறவே கிடையாது. அவற்றிலே சில குழுக்கள்பிரமுகர்கள் 1987 ஆகஸ்டில் சென்னையில் கூடி "சாதியும் வர்க்கமும்'' பற்றி ஒரு ஆய்வரங்கம் நடத்தினார்கள். அதிலும் அதன்பிறகும் இந்த அறிஞர்கள் செய்துள்ள முடிவு எல்லாம் இந்தப் பிரச்சினை குறித்து மேலும், மேலும் மேலும் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்பதுதானே தவிர முடிவும் தீர்வும் எதுவுமில்லை.

இன்னும் சில குழுக்கள், குறிப்பாக பீகாரில் சாதி மற்றும் வர்க்கப் போராட்டங்களை இணைக்க முயன்றனர். சாதி ரீதியிலேயே சில அமைப்புகளைக் கட்டினர். ஆனால் அதன் தலைமை இயல்பாகவே சாதிவெறி பிடித்துப் போய் பிற சாதிகளின் நிலமற்ற, ஏழை விவசாயிகள் பெண்கள் குழந்தைகளையே வெட்டிக் கொல்லும் அளவுக்குச் சீரழிந்து போனது. அடுத்தடுத்த சாதிகள் அடுக்குமுறையில் சாதிய ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருப்பதால், இந்தக் கசப்பான முடிவு தவிர்க்க முடியாததானது.

மூன்றாவதாக, வர்க்கப் புரட்சியின் மூலம் வருணாசிரம பார்ப்பனிய இந்துமத வெறியையும் அதன் அடிப்படையிலான சாதிய அமைப்பையும் தகர்த்திட வேண்டும் என்கிற சில மார்க்சிய லெனினியக் குழுக்களின் நிலைப்பாடும் முயற்சியும். இதுவே சரியானதெனக் கருதுகிறோம். ஆனால் " பொதுவான போராட்டங்களில் பங்கு பெற்றால் சாதிய உணர்வு மறைந்துவிடும்' என்று சாதிய ஒடுக்குமுறைகளையும், இந்துமத வெறியையும் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. ஒவ்வொரு விவகாரத்திலும் தனிச்சிறப்பான முக்கியத்துவம் அளித்து அவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும். வர்க்கரீதியாக அணிதிரட்டுவதில் கூட உறுதியாக இருக்கும்போது கிட்டத்தட்ட முழுக்கவும் உழைக்கும் மக்களாக உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சாதியினரும், பிற்பட்ட சாதிகளிடையே பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களுமே புரட்சியின் தலைமை மற்றும் பிரதான சக்திகளாக இருக்க முடியும். இந்த முறையிலே வருணாசிரம பார்ப்பனிய இந்துவெறிக்கும் சாதிய அமைப்புக்கும் எதிரான சக்திகளை ஒன்றுபடுத்தி அவ்றைத் தகர்க்க முடியும். இதற்கு முதற்பணியாக முக்கியப் பணியாகச் செய்ய வேண்டியது, வர்க்க ரீதியில் திரட்டப்படும் அமைப்புகளுக்குள் சாதி ஆதிக்க வெளிப்பாடுகள், சாதிப் பாகுபாடுகள் அனைத்துக்கும் எதிராக இடையறாத போராட்டம் நடத்த வேண்டும். அப்போதுதான் அவை புரட்சிகர அமைப்புக்களாக இருக்கவும் ஒடுக்கப்படும் மக்களின் நம்பிக்கையைப் பெறவும், ஒடுக்கும் சாதி ஆதிக்கத்தை வீழ்த்தவும் முடியும்.

No comments: