Wednesday, October 29, 2008

இந்தியாவில் வாழும் மக்களுக்கு உண்மையிலேயே சுதந்திரம் கிடைத்துவிட்டதா? சுதந்திரம் என்பது என்ன?

இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் வாங்கி 61வருடங்களாகியும்,இந்தியா வளர்ந்து வரும் நாடாகவே இருக்கிறது.உலகத்தில் உள்ள ஏழைகளிலே மூன்றில் ஒரு பங்கு ஏழைகள் இந்தியாவில் வாழ்வதாக கூறுகிறது ஒரு புள்ளியல்கணக்கீடு.ஆனால் உலகபணக்காரர்கள் வரிசையில் முதல் 20 இடங்களில் 4 இந்தியா பணக்காரர்கள் இது எப்படி நடக்கிறது. இந்தியாவில் 70சதவித மக்கள் 30ரூபாய்க்கு கீழ் ஒருநாள் வருமானம் இருப்பதாக கூறுகிறது காங்கிரஸின் புள்ளிவிவரம்.அப்படி இருக்க இன்றைக்கு அத்தியாவசியப்பொருட்களின் விலை வீண்னை தொடும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதைப்பற்றி கம்யுனிஸ்ட்டுகள், பிரதமமந்திரியிடம் முறையிட்டால்,வளர்ந்து வரும் நாடு இப்படிதான் விலைவாசி உயரும் என்று உரைக்கிறார் இந்திய பிரதமர்.அப்போது வளர்ச்சி என்பது என்ன? அது இந்தியா என்ற அரசாங்கத்தின் வருமானம் சுரண்டல் தான் வளர்ச்சியா?இல்லை முதலாளிகள் தொழிலாளர்களின் இரத்தத்தை உறுஞ்சும் வருமானம் தான் வளர்ச்சியா?சரி உண்மையில் ஒரு நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கவேண்டும்? மிகவும் எளிது அது. ஒவ்வொரு குடிமக்களின் வளர்ச்சிதான் அது நாட்டின் வளர்ச்சி.ஒரு நாடு தனது அரசாங்க சேமிப்பில் எவ்வளவு இருக்கிறது என்பதை விட தனது நாட்டில் உள்ள மக்களின் அடிப்படை வசதியை பூர்த்திசெய்து  இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.அதாவது அவனது தொழிலில் நிரந்தரமாக உள்ளதா?.அவனுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கிறானா? அவனிடம் ஒழுக்கத்தை அடிப்படையாகக்கொண்ட செயல்களில் விழிப்புணர்வுடன் இருக்கிறானா? அவன் தேசத்தின் மீது அன்பு வைத்துள்ளானா என்பதெல்லாம் அடங்குகிறது ஒருநாட்டின் வளர்ச்சி.இப்படி இல்லாமல் மக்களை வரி என்ற பெயரில் விலைவாசி உயர்வை ஏற்றிவிட்டு, அதன் மூலம் அரசாங்கத்தின் சேமிப்பை பலப்படுத்த நிலைப்பது ஒரு மிகப்பெரிய முட்டாதனத்தின் வெளிப்பாடே.இது ஒரு சர்வதிகார ஆட்சியை நோக்கி செல்லும் அரசாகவே இருக்கும். ஒரு நாட்டின் பலம் அந்த நாட்டின் இராணுவம் மற்றும் பொருளாதாரம்தான். ஆனால் மக்கள் அந்த அரசாங்கத்தால் துன்பங்களை அனுபவித்தால், அந்த அரசாங்கம் எதிரிகளால் எளிதில் விழ்த்திவிடலாம்.அது எவ்வளவு பெரிய இராணுவம் கொண்ட அரசாங்கம் இருந்தாலும் சரி,மக்களின் நன்மதிப்பைபெறாத அரசாங்கம் அழிந்தேவிடும் இதற்கு பல வரலாற்றுகளே சான்று.சரி சுதந்திரத்திற்கு வருவோம். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது.அது 1947ல் ஆகஸ்ட் 15ஆம் நாள் என்று அனைவருக்கும் தெரியும்.ஒவ்வொரு குடிமக்களிடமும் நான் கேட்பதெல்லாம்,இந்தியாவிற்கு உண்மையிலெயே சுதந்திரம் கிடைத்துவிட்டதா? சுதந்திரம் என்பது என்ன? ஒரு நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம், ஒரு குடிமக்களின் அடிப்படை உரிமையே பறிக்கும் பட்சத்தில் இருக்குமாயினால் அது எப்படி சுதந்திர நாடாக இருக்கமுடியும். அப்போ ஜனநாயகம் என்பது ஓட்டுப்போடுவதுதான்.அதோடு முடிந்திவிடுகிறது அல்லவா? சட்டம் என்பது வலியவர்கள் எளியவர்களை ஒடுக்குவதற்காக போடப்படும் சூழ்ச்சியின் தந்திரம் தானா? அரசியல்வாதிகள் ஓட்டுக்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள் தட்டிக்கேட்டால் சட்டத்தைக்கொண்டு அடிப்பார்கள்.இதுதான் சட்டமா?
சுதந்திரம் என்பதே அடங்கி ஒடுங்கு என்பதா? அடிமையாக இரு என்பதா?
சுதந்திரம்” இதைவிட ஒரு உயிரின் அடிப்படை உரிமை எது என்றால் அது பிறப்புரிமைதான் என்னென்றால் சுதந்திரத்தைவிட இந்த பிறப்புரிமை மிகவும் அடிப்படையானது. ஒரு உயிர் இந்த உலகத்தில் பிறக்கிறது, பேசுகிறது,வளர்கிறது,கற்றுக்கொள்கிறது,கற்றுக்கொண்டதில் இருந்து தனக்கேயுள்ள குணத்தால் சிந்திக்கிறது, சிந்தித்ததில் இருந்து தன் கருத்தை இவ்வுலகிற்கு சொல்கிறது.அது உண்மையோ,பொய்யோ,அது முற்போக்கான கருத்தோ,பிற்போக்கான கருத்தோ ஆனால் அது தான் அந்த உயிரின் பிறப்புரிமை. இதை ஆன்மீகரிதில் சொல்லவேண்டும் என்றால் அது அந்த உயிரைப்படைத்த அந்த கடவுளின் வெளிப்பாடே.கடவுளின் நோக்கமே.இப்படி மனித இனத்தின் பிறப்புரிமையை தடைசெய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது. அப்படி தடைசெய்தால் அது அந்த கடவுளையே தடை செய்வதற்கான நிலைதானே. அது நாடு என்ற தேசியத்தின் அடிப்படையில் வந்தாலும் தவறுதானே.சமிப காலமாக நிகழக்கூடிய நிகழ்வுகளான,ஈழம்,விடுதலைப்புலிகள்,மாவோயிசம்,காஸ்மீர்,வட கிழக்கு பிரதேசம் பிரச்சனைகள் போன்றவற்றில் மக்களின்  கருத்துரிமையே பாதிக்கப்பட்டு தேசியம் என்ற வெறியுடன் ஒடுக்கப்படுகிறது. .இதை நம் இந்தியா என்ற உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடுதான் செய்துக்கொண்டு இருக்கிறது.இது ஆங்கிலேயன் ஆட்சியைவிட மிகவும் கொடுமையான ஆட்சியாகவே எனக்கு தெரிகிறது. பல மதத்தை சார்ந்தவர்கள் வாழும் நாட்டின் சட்டங்கள் மதத்தை அடிப்படையாக கொண்டு இருக்ககூடாது.மதத்தின் சித்தாந்தங்கள் ஒருநாட்டின் சட்டங்களை விட மேலேங்கி இருக்கக்கூடாது.அப்படி இருந்தால் அது பிறப்புரிமையையே பாதிக்கும் என்பதற்கு நல்ல எடுத்துக்காடாக திகழ்கிற நாடுதான் நம் இந்தியா.

Monday, August 4, 2008

புரட்சியாளர் ஸ்டாலின்

ஸ்டாலின் தனது பாடசாலை வாழ்க்கையிலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் கண்டு அதைத் துடைக்க, தனது 16 வது வயதில் அதாவது 1895 இல் கம்யூனிஸ் கட்சியுடனான உறவைத் தொடங்குகின்றார். 1890 களின் இறுதியில் பல போராட்டத்தை நடத்தியதுடன், கட்சி வாழ்வை தொடங்கிவிடுகின்றார். கட்சி வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை கைவிட்டு சென்ற மென்ஷிவிக்குகள், போராட்ட நெருக்கடியில் கட்சிக் கலைப்பு வாதத்தை முன்வைத்து ஓடுகாலிகள், நடுநிலை சந்தர்ப்பவாதிகள், பலர் பலவிதத்தில் நீண்ட விடாமுயற்சியான நெருக்கடியான வர்க்க போராட்டத்தை கைவிட்டுச் சென்ற எல்லா நிலையிலும், ஸ்டாலின் வர்க்கப் போராட்டத்தை முன்நிலைப்படுத்தினார், அதற்காக போராடினார், அதைப் பாதுகாத்து நின்றார். இந்தப் போராட்டத்தை நடத்துவதில் அவர் இரும்பு மனிதனாக இருந்ததால், அவரை லெனின் இரும்பு என்ற பெயரால் ஸ்டாலின் என்று அழைத்தார். பாட்டாளி வர்க்க, வர்க்கப் போராட்டத்தை உறுதியாக நடத்திய வரலாற்றில், அவர் ஆறு முறை தொடர்ச்சியாக சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து பலமுறை புரட்சியின் கடமையை முன்னெடுக்க தப்பியே வந்தார்.

1912 ம் ஆண்டு போல்ஷிவிக் கட்சி பிராக்கில் கூடிய போது, மென்ஷிவிக்குகளை கட்சியில் இருந்து முற்றாக வெளியேற்றியதுடன், லெனின் தலைமையிலான கட்சி தனது சுயேட்சையான பாட்டாளி வர்க்க புரட்சிகரத் தன்மையை ஸ்தாபன வடிவில் பகிரங்கமாக அறிவித்தனர். இந்த காங்கிரஸ் ஸ்டாலின் சிறையில் இருந்த போதும், ஸ்ராலினை மத்திய கமிட்டிக்கு தெரிவு செய்ததுடன், லெனின் ஆலோசனைப் படி நாட்டில் நடைமுறை வழிகாட்டும் தலைமை உறுப்பு ஒன்றை உருவாக்கியதுடன், அதன் தலைவராக அதற்கு தகுதியான ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். நாட்டின் புரட்சிகர அமைப்பாக்கல் மற்றும் அனைத்து வர்க்கப் போராட்டத்தையும், நேரடியாக கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், 1912 இல் இருந்தே ஸ்டாலின் கட்சிக்கு வழிகாட்ட தொடங்கிவிட்டார். 1917 போல்ஷிவிக் புரட்சியில் லெனின் பங்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேயளவுக்கு லெனினை முக்கியத்துவப் படுத்திய புரட்சியை முன்னெடுக்கும் நடைமுறைத் தலைமையை ஸ்டாலின் வழங்கினார். லெனின் கோட்பாட்டு தலைமை புரட்சியில் எவ்வளவுக்கு முக்கியமாக நடைமுறை சார்ந்து வழிகாட்டலுக்கு உள்ளாகியதோ, அதேபோல் ஸ்டாலின் நடைமுறைத் தலைமை புரட்சியை முன்னெடுத்த அமைப்பை உருவாக்குவதில் கோட்பாட்டு வழிகாட்டலை ஒருங்கிணைத்தது. இந்த இரு தலைமையும் ஒரு சேர நிகழ்ந்த வரலாற்றில் தான் சோசலிச புரட்சி வெற்றி பெற்றது. இவ் இரண்டும் இன்றி சோவியத் புரட்சி என்பது கற்பனையானது. இரண்டு துறை சார்ந்த முன்னணி பொறுப்பு வாய்ந்த தலைவர்களும், தத்தம் பணியில் வெற்றிகரமாக இணைந்து வழிகாட்டிய வரலாறு தான், சோவியத் புரட்சியை நடத்தியது. இந்தளவுக்கு வேறு எந்த தலைவரும் புரட்சியை முன்னெடுக்கும் தலைமைப் பொறுப்பை, பல்வேறு நெருக்கடிகளில் கொண்டிருக்கவில்லை. நாட்டுக்கு வெளியில் இருந்த லெனின் வழங்கிய கோட்பாட்டு தலைமையும், நாட்டுக்குள் ஸ்டாலின் வழங்கிய நடைமுறை அமைப்பாக்கல் தலைமையும், ஒன்றிணைந்த புரட்சி தான் சோவியத் புரட்சியாகும்.

ஸ்டாலின் திடீரென அதிகாரத்தை கைப்பற்றினான் என்பது எல்லாம் இடது வேடம் போட்டவர்களின் வெற்று அவதூறுகளாகும.;; ஸ்டாலின் நீண்ட அனுபவம் கொண்ட, போராட்ட தலைவனாக, நெருக்கடிகளில் முன் மாதிரி போல்ஷிவிக்காக போராடிய முன்னணி தலைவராக திகழ்ந்தமையால், 1912 லேயே மத்திய குழுவுக்கு தெரிவு செய்ததுடன், நாட்டின் நடைமுறை போராட்டத்துக்கான தலைமைப் பொறுப்பை லெனினின் முன்மொழிவுடன், 1912 லேயே ஏற்றுக் கொண்டு போல்ஷிவிக் தலைவரானார். இந்த தலைமைப் பொறுப்பை சதிகள் மூலமல்ல, பாட்டாளி வர்க்க போராட்டத் தலைவனாக நடைமுறையில் இருந்தமையால், அவர் சிறையில் இருந்த போதும் கட்சி அவரிடம் தனாகவே ஒப்படைத்தது.

1917 இல் நடந்த முதல் புரட்சியைத் தொடர்ந்து, யூன் மாதம் மென்சுவிக்குகள் ஆதிக்கம் வகித்த ரஷ்ய சோவியத்தின் முதல் காங்கிரசின் மத்திய நிர்வாக குழுவுக்கு, ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டதன் மூலம், ஒரு தலைவராகவே இருந்தார். 1917 இல் பெப்ரவரி புரட்சியை நடத்தியவர்கள் போல்சவிக்குகளை கைது செய்து, லெனினை கொன்று விட அவதூறுகளை பொலிந்த போது, டிராட்ஸ்கியும், காமனேவும் சிறைப்பட்டு நியாயம் கோரி வழக்காட வேண்டும் என்றே முன்மொழிந்தனர். ஸ்டாலின் அதை நிராகரித்ததுடன், லெனினின் பாதுகாப்பை தானே பொறுப்பெடுத்தார். ஐரோப்பாவில் புரட்சி நடைபெறாமால் பாட்டாளி வர்க்க புரட்சியா? என்ற கேள்வியுடன் டிராட்ஸ்கி, ருசியாவில் சோஷலிஸத்தை சாதிக்க முடியாது என்று புரட்சியை எதிர்த்த போது, ஸ்டாலின் ~~சோஷலிஸத்துக்குப் பாதை வகுக்கும் தேசமாக ரஷ்யா இருக்கக் கூடுமென்பதை புறக்கணிக்க முடியாது.... ஐரோப்பா மட்டுமே வழிகாட்ட வேண்டுமென்ற பத்தாம் பசலிக் கருத்தைக் கைவிடவேண்டும். குருட்டுத்தனமான வறட்டு மார்க்சியமும் இருக்கின்றது. படைப்புத் தன்மை கொண்டு வளரும் மார்க்சியமும் இருக்கின்றது. இரண்டாவது வகையை ஆதரிக்கின்றேன். என்றார்.

ஐரோப்பா புரட்சியின்றி தொடரும் வர்க்கப் போராட்டம் வெற்றி பெறாது என்று கூறி, டிராட்ஸ்கி சோசலிசம் என்ற வர்க்கப் போராட்டத்தை எதிர்த்து முன்வைத்த வாதம் மற்றும் நடைமுறைகள், உண்மையில் முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிசத்தை ஒரே தாவில் தாண்டிவிடக் கோரும் இடது தீவிரத்தின் உள்ளடக்கமாகும். அராஜக வாதம் எதை கோட்பாட்டில் முன்வைக்கின்றதோ, அதையே இது பின் பக்கத்தால் வைக்கின்றது. சோசலிச சமூகம் என்பது கம்யூனிசத்தை நோக்கிய, அடுத்த கட்ட வர்க்கப் போராட்ட தயாரிப்பு மற்றும் முன்னெடுப்பு காலம் என்பதை மறுப்பதில் இருந்தே, ~~தனிநாட்டு சோசலிசம் என்ற எதிர்ப்பின் பின் உள்ள அரசியல் உள்ளடக்கமாகும். பாட்டாளிகள் வர்க்கப் போராட்டம் மூலம் கைப்பற்றும் ஆட்சி மாற்றம், வர்க்கப் போராட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரு வடிவ மாற்றம் மட்டுமே தான். இங்கு கம்யூனிசத்தை நோக்கிய போராட்டத்தை சோசலிச சமூகத்தில் கைவிடக் கோருவது, வர்க்கப் போராட்டத்தை பின்பக்க கதவால் இழுத்து தடுப்பதாகும்.

வர்க்கப் போராட்டத்தைப் பற்றி லெனினின் தெளிவான நிலைப்பாட்டைப் பார்ப்போம்;. ~~சுதந்திரம், சமத்துவம் என்ற முழக்கங்களால் மக்களை ஏமாற்றுவது பற்றிய உரைக்கு முன்னுரையில் ~~பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர்க்கப் போராட்டத்தின் முடிவல்ல் ஆனால் புதிய வடிவங்களில் இதன் தொடர்ச்சியாகும். தோற்கடிக்கப்பட்ட ஆனால் துடைத்தொழிக்கப்படாத ஒரு முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிராக, மறைத்து போகாத, எதிர்ப்பைத் தருவதை நிறுத்தாத, ஆனால் எதிர்ப்பை மேலும் ஆழப்படுத்தியுள்ள ஒரு முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிராக வெற்றி பெற்று அரசியல் அதிகாரத்தை கரங்களில் எடுத்துக் கொண்ட பாட்டாளி வர்க்கத்தால் தொடுக்கப்படும் வர்க்கப் போராட்டமே பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமாகும். என்றார் லெனின். ஆனால் இதை எதிர்ப்பதில் தான் இன்றைய எல்லா இடது முகமூடிகளும் சரி, அன்றைய ட்ராட்ஸ்கி மற்றும் புக்காரின் தங்கள் அரசியலை கட்டமைத்தனர், கட்டமைக்கின்றனர். இவர்கள் லெனின் காலத்தில் சந்தர்ப்பவாதமாக மூடிமறைத்தபடி இதைப்பற்றி வாய்திறந்து எதிர்க்கவில்லை. ஆனால் முடிமறைத்த வகையில் தமது ஆட்சியை நிறுவுவதன் மூலம், இதை மறுக்க முனைந்தனர். இதில் தோற்ற போது இதை எதிர்ப்பது ஒரு அரசியல் கொள்கை விளக்கமாகி அதுவே சதியாகியது.. ஆனால் ஸ்டாலின் இதை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்ததில் தான், அவர் மீதான அவதூறுகள் கட்டமைக்கப்பட்டன, கட்டமைக்கப்படுகின்றது.

1917 அக்டோபர் 23ம் தேதி கட்சியின் மத்தியக் கமிட்டி கூடி எடுத்த வரலாற்று புகழ்மிக்க புரட்சியை நடத்துவது பற்றிய முடிவில், ஆயுதம் ஏந்திய எழுச்சிக்கு தலைமை தாங்க அமைக்கப்பட்ட குழுவுக்கு தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இங்கு ஸ்டாலின் சதி செய்து புரட்சிக்கு தலைமை தாங்க வந்தவர் அல்ல. கட்சி தனது தலைவரை தெரிவு செய்வது இயல்பானது. இந்த பொறுப்புமிக்க நடைமுறை ஸ்தாபனப் பணியை செய்யும் தகுதி, ஸ்ராலினைத் தவிர வேறு எந்த மத்திய குழு உறுப்பினருக்கும் அன்று இருக்கவில்லை. ஆனால் இடதுசாரி பெயரில் எழுதுபவர்கள் இதைப் பற்றி வகை வகையாக, வண்ணம் வண்ணமாக எழுதுவது மட்டுமே, அவர்களின் மலட்டுப் பிழைப்பாக உள்ளது.

ஸ்டாலின் என்ற தலைவருக்கு 1919 நவம்பர் 27ம் திகதி லெனின் முன்மொழிந்த தீர்மானத்தின் படி, ஸ்ராலினுக்கு செங்கொடி பதக்கம் வழங்கப்பட்டது. இதே விருதை டிராட்ஸ்கியும் பெற்றார். டிராட்ஸ்கி செஞ்சேனை சார்ந்து பாதுகாப்பு மந்திரியாக இருந்த போதும், சோவியத் புரட்சியை பாதுகாக்க செஞ்சேனையை தலைமை தாங்கி, எதிரிகளை ஒழித்துக் கட்டிய பங்களிப்பு சார்ந்து வழங்கிய விருது, அதே கராணத்துக்காக ஏன் ஸ்ராலினுக்கு வழங்கப்பட்டது.

சோவியத்துக்கு ஆபத்து ஏற்பட்ட இடங்களில் எல்லாம், கட்சியின் விசேட வேண்டுகோள்களை நிறைவேற்றுவதில், ஸ்டாலின் முன்முயற்சியுடன் செஞ்சேனையை வழி நடத்திய திறமைமிக்க தளபதியாக திகழ்ந்த தனித்துவமான பணிக்காக வழங்கப்பட்டது. கட்சியின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஸ்டாலின் பல போர்முனைகளில் பல வெற்றிகளை சாதித்ததன் மூலம், சோவியத்தை பாதுகாத்தார். ஸ்டாலின் கிராட்டில் (ஜாரீட்ஸின்) இருந்து தேவையான உணவை பெறவும், இராணுவ ரீதியாக அதை வெற்றி பெறவும் கட்சியின் வேண்டுகோளின் படி, அதை மீட்டு எடுத்தார். இந்த யுத்த பிரதேசத்தில் டிராட்ஸ்கி செஞ்சேனைக்கு தளபதியாக நியமித்த பழைய ஜார் மன்னனின் இராணுவ தளபதிகளை நீக்கி, புரட்சிகரமான செஞ்சேனை, புரட்சிகரமான தளபதிகளின் தலைமையில் அப்பகுதியை மீட்டு எடுத்தார்.

அடுத்த மத்திய கமிட்டி வேண்டுகோளுக்கு இணங்க யூக்குரேணுக்கு சென்று அப்பகுதியை மீட்டதுடன், கார்க்கோ, பேலோ ரஷ்யாவையும் மீட்டார். 1918 இல் கிழக்கு முனையில் ஏற்பட்ட ஆபத்தை எதிர் கொள்ள மத்திய கமிட்டி வேண்டுகோளுக்கு இணங்க அங்கு சென்று கிழக்கு போர்முனையை வென்றார். அங்கு இருந்து மீண்ட ஸ்டாலின் புதிய பொறுப்பாக அரசாங்கச் செயலாட்சி அமைச்சராக கட்சியால் நியமிக்கப்பட்டார். இது தொழிலாளர், விவசாயிகள் கண்காணிப்பு வாரியம்;. ஊழல், நாசவேலை, கையாலாகாத்தனம் போன்ற அனைத்தையும் கட்டுப்படுத்துவதில், ஸ்டாலினின் பங்கு கோரப்பட்டது.

1919 இல் மார்ச்சில் எதிரி பெத்ரோகிராதை கைப்பற்ற முன்னேறிய போது, ஸ்டாலினை கட்சி அங்கு அனுப்பியது. அங்கு அவர் மாபெரும் சாதனையை சாதித்து எதிரியை நொருக்கித் தள்ளினார். பின்பு எதிரி ஓரெல் நகரை பிடித்த பின்பு, மொஸ்கோவை நான்கு மணிநேரத்தில் அடையும் வகையில் எதிரி அருகில் நெருங்கி வந்த நிலையில், மொஸ்கோவில் முதலில் கால் வைப்பவனுக்கு 10 லட்சம் ரூபிள் பரிசு அளிக்கப்படும் என்ற நிலையில், லெனின் தெனீக்கின் - எதிர்ப்புப் போரில் சகல சக்திகளும் திரளட்டும் என்றார். 1919 இல் மத்திய கமிட்டி இந்த எதிர்ப்பு போருக்கு தலைமை தாங்க ஸ்டாலினை நியமித்தனர். ஸ்டாலின் இந்த பிரதேசத்தை பாதுகாக்க வைத்த திட்டத்தை, கட்சி அங்கிகரித்த நிலையில், இப்போரில் ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்றனர். 1920 இல் முற்றாக இப்பகுதி விடுவிக்கப்பட்டது.

போலிஷ் படை தாக்குதலை தொடுத்த போது, அங்கும் ஸ்டாலின் அனுப்பப்பட்டார். ஏகாதிபத்திய தலைமையில் விரங்கல் புதிய தாக்குதலை யூக்ரேனில் தொடங்கிய போது, மத்திய குழு பின் வரும் திர்மானத்தை எடுத்தது. ~~விரங்கல் வெற்றியடைந்து வருகின்றான். கூபான் பிரதேசத்தில் கவலைக்கிடமான நிலைமை. எனவே விரங்கல் எதிர்ப்புப் போரை மிகவும் முக்கியமானதாகவும் முற்றிலும் சுயேட்சையானதாகவும் கருத வேண்டும். ஒரு புரட்சி இராணுவக் குழுவை அமைத்துக் கொண்டு, விரங்கல் முனையில் முழு முயற்சியையும் ஈடுபடுத்துமாறு மத்தியக் கமிட்டி தோழர் ஸ்டாலினுக்கு கட்டளையிடுகின்றது இதை ஸ்டாலின் நிறைவேற்றியதன் மூலம், ஒரு இராணுவ தளபதியாக நிமிர்ந்து நின்றார்.

இந்த புரட்சிகர யுத்தத்தில் ஒரு செஞ்சேனை தளபதியாக, தலைவனாக ஸ்டாலின் தனித்துவமான பணியை, லெனினால் முன்மொழியப்பட்டு மத்திய குழு அங்கீகரித்து வழங்கிய பதக்க அறிக்கையில் பேராபத்தான நேரத்தில் நானா பக்கங்களிலும் விரோதிகளின் வளையத்தால் சூழப்பட்டிருந்த பொழுது.... போராட்டப் பொறுப்புக்குத் தலைமைக் குழுவால் நியமிக்கப்பட்ட ஜே.வி.ஸ்டாலின், தன் சக்தியாலும் களைப்பறியாத உழைப்பாலும், தடுமாறிய செம்படைகளை திரட்டுவதில் வெற்றி கண்டார். அவரே போர் முனைக்குச் சென்று, எதிரியின் நெருப்புக்கு முன் நின்றார். தன் சொந்த உதாரணத்தால், சோஷலிஸ்ட் புரட்சிக்காகப் போராடியவர்களுக்கு உத்வேகம் ஊட்டினார். இந்த தீர்மானத்தையே இன்று இடது வேடதாரிகள் திரித்து மறுக்கின்றனர். ஸ்டாலின் இரண்டாம் உலக யுத்தத்தில் ஒரு தளபதியாக இருந்தே இருக்க முடியாது என்கின்றனர். சோவியத் புரட்சியில் ஸ்டாலின் பயந்து ஒளித்துக் கிடந்ததாகவும், வீம்புக்கும், வம்புக்கும் யுத்த முனைக்கு சென்றதாகவும், பல விதமாக அவதூறுகளை கட்டியே பிழைப்பைச் செய்கின்றனர். ஆனால் லெனின் வழங்கிய கருத்தும், பரிசும் மார்க்சிய வரலாற்று ஆவணமாக சர்வதேசிய வழியாக உள்ளது என்பதை மறந்துவிடுகின்றனர்.

1922 மார்ச், ஏப்பிரலில் நடந்த பதினொராவது கட்சி காங்கிரசில், கட்சி பொதுக் காரியதரிசி பதவி ஒன்று உருவாக்கப்பட்டு, லெனின் பிரேரணைக்கு இணங்க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியை ஸ்டாலின் உருவாக்கி, அதில் அதிகாரத்தை குவித்து, கட்சி உறுப்பினர்களை தனது சார்பாக நியமித்ததாக, போலி இடதுசாரி பிழைப்புவாதிகள் பசப்புகின்றனர். போல்ஸ்விக் கட்சி வரலாற்றில் லெனினுக்கு பின்பு யாரும் ஸ்ராலினை தாண்டி கட்சித் தலைவராக உயர்ந்ததில்லை. நீண்ட கட்சி வரலாற்றில் லெனினுடன் அக்க பக்கமாக போராடியதுடன், நாட்டின் தலைமைப் பொறுப்பை ஸ்டாலினே மேற் கொண்டார். ஸ்டாலின், லெனின் மரணத்துக்கு முன்பே, அதாவது 1912 லேயே லெனின் முன்மொழிவுடன், கட்சியே ஸ்ராலினிடம் தலைமைப் பொறுப்பை கொடுத்திருந்தது. இதை எல்லாம் வரலாற்றில் புதைத்துவிட முயலும், இடதுசாரி வேசைத்தனம் வரலாற்றை இருட்டடிப்பு செய்கின்றது.

1924 இல் லெனின் எழுதிய சக தலைவர்கள் பற்றி, நாம் பார்ப்பது அவசியமாகும். ஸ்டாலினுக்கும், டிராட்ஸ்கிக்கும் இடையில் இருந்து வரும் முரண்பாட்டை பற்றி லெனின் சரியாக மதிப்பிடுகின்றார். இங்கு முரண்பாட்டில் இருவரின் பங்கையும் காண்பதுடன், இரண்டு தலைவர்களின் சிறப்பு மற்றும் குறைகளையும் காண்கின்றார். கட்சியின் ஒற்றுமையை முதன்மையாக கருதிய லெனின், ஸ்டாலின் பற்றிய குறிப்பில், அவர் கையில் அதிகாரம் குவிந்திருப்பதால் அதை அவர் போதுமான முன் எச்சரிக்கையுடன் கையாள்வதில் தவறு இழைப்பார் என்ற சந்தேகத்தை முன்வைக்கின்றார். இதனால் மட்டும் பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை பிரேரிக்க கோருகின்றார். இதை அவர் குறிப்பிடும்போது, தோழர்களை அணுகும் முறைகளில் இவரை விடச் சிறந்தவர் மட்டும், அதாவது மற்றையவற்றில் அல்ல என்பதை தெளிவாக லெனின் குறிப்பிட்டார். ஆனால் இன்று இதை மறுத்து வர்க்க அரசியல் மார்க்கத்தில் பொதுமைப்படுத்தி, வர்க்கப் போராட்டத்தையே உயிருடன் அரித்து தின்கின்றனர். இதைத் தான் அன்று குருசேவ் என்ற ஜனநாயகவாதியும் செய்தான். இந்த குருசேவ் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக இருந்ததும், ஏன் பெர்லின் மதிலை அமெரிக்க ஜனாதிபதிக்கும் ஜனநாயகவாதி குருசேவுக்கும் இடையில் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தத்துக்கு இணங்க, மேற்கு ஜெர்மனி கட்டிடப் பொருளை இலவசமாக வழங்க, கம்யூனிசத்தின் பெயரில் கைக்கூலி குருசேவால் கட்டப்பட்ட மதில் மூலம், கம்யூனிசத்தை இரும்புத் திரை ஜனநாயகமாக காட்டிய செம்மல் ஆவர்.

லெனின் டிராட்ஸ்கி பற்றி, யாவரிலும் வல்லமை வாய்ந்தவர் என்றதுடன், நிர்வாகத் தன்மை வாய்ந்த அணுகுமுறை மற்றும் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை குறைகளாக லெனின் சுட்டிக் காட்டினார். டிராட்ஸ்கி பற்றிய லெனின் கருத்து நிர்வாகத் தன்மையில் கட்சியை வழி நடத்தும் போது, நிர்வாக வடிவம் அதிகார வர்க்க அணுகு முறையும், தன்னம்பிக்கை வரட்டுத்தனம் சார்ந்து காது கொடுத்து கேட்பதற்கு தயாரின்மையை சுட்டிக் காட்டுகின்றார்

இங்கு ஸ்டாலின் ஒரு கட்சி செயலாளராக இருக்கும் போது, மற்றைய தோழர்களுடன் அணுகிக் கொள்ளும் போக்கில் ஏற்படும் தவறுகள், கட்சியின் உயிரோட்டமுள்ள இயங்கியலை சிதைக்கும் என்பதை லெனின் தெளிவுபடுத்துகின்றார். இங்கு இந்த விமர்சனங்களை லெனின் கட்சி வரலாற்றில் இருந்தே புரிந்து கொள்கின்றாரே ஒழிய, குறிப்பான நிலைமைகள் மற்றும் சம்பவங்களில் அல்ல. குறிப்பான நிலைமை மற்றும் சம்பவத்தில் புரிந்ததாக காட்டுவது, லெனின் மார்க்சியத்தையும், அவரின் சர்வதேசிய வீச்சையும் சிறுமைப்படுத்தி தமக்கு சதகமாக்க கொச்சைப்படுத்துவதாகும். இது போலி இடதுசாரி வேஷத்தின் பின் வர்க்க போராட்டத்தின் உயிராற்றலை கொன்றுவிடுவதாகும்;. சர்வதேசியம் மற்றும் சோவியத் புரட்சிக்கான தத்துவார்த்த தலைமையை தொடர்ச்சியாக லெனின் வழங்கி வந்ததும், கட்சியின் மற்றைய தோழர்கள் இதில் அதிகம் தேர்ச்சி பெற்ற முன்னணி தலைவர்களாக வளர்ச்சி பெறாமையும், லெனின் கட்சிக்குள்ளான முரண்பாடுகள் மேல், வெற்றிகரமாக பாட்டாளி வர்க்க தலைமையை கோட்பாடு சார்ந்து நிறுவியதுடன், மார்க்சியத்தை வளர்த்து விரிவாக்கியதன் ஊடாக, வென்று எடுத்த போக்கில் இருந்து, தனது மரணத்தின் பின்பு என்ன வகையில் இவை கையாளப்படும் என்றே அஞ்சினார். ஸ்டாலின் நடைமுறை சார்ந்து (இங்கு கோட்பாட்டு பங்களிப்பை மார்க்சியத்துக்கு தொடர்சியாக செய்துள்ளர்) அதிகமாக கட்சி வரலாற்றை கொண்டிருந்தமையும், டிராட்ஸ்கி போல்ஷ்;விக் புரட்சிக்கு முன் பின் என்ற இரு காலத்திலும், இடை நடுபாதை, எதிர்நிலை, சதி போன்றவற்றை தனது முரண்பாட்டின் மீது அடிப்படையாக கொண்டே தனது அரசியலை, பாட்டாளி வர்க்க கோட்பாடு அடிப்படை சாராத நிலையில் கையாண்டமையால், இதனால் கட்சியின் முரண்பாடு எதிர் நோக்கும் அபாயத்தை புரிந்து கொண்டார். நடைமுறையில் எதிரியை உடனடியாக அடையாளம் காண்பதும், இடைநிலை போக்கு சார்ந்து நழுவலை வெளிப்படுத்தும் சந்தர்ப்பவாதத்தின் சூழ்ச்சியை வெறுப்பது, நடைமுறை சார்ந்து போராடுபவர்கள் உடனடிக் குணாம்சமாக இருக்கின்றது. இதில் தனிப்பட்ட நபர்களின் குணம்சம் கூட இதை மேலும் ஊக்கிரமாக்கும் என்பதை காண்கின்றார். லெனின் மரணத்தின் பின்பு ஸ்டாலின் சோசலிசத்தை கட்ட முடியுமா?, இல்லையா? என்ற அடிப்படையான விவாதம் மீது (இது ட்ராட்ஸ்கி தனது தலைமையை நிறுவ உருவாக்கிய பிரதான முரண்பாடும், கோட்பாடுமாகும்), லெனின் தத்துவார்த்த பங்களிப்பை போன்று ஸ்டாலின் தனது பங்களிப்பை சோசலிசத்தை கட்ட முடியும் என்று தத்துவார்த்த துறை சார்ந்து அதை நிறுவினார். சோசலிசத்தை கட்ட முடியாது என்ற டிராட்ஸ்கியும் கட்ட முடியும் ஆனால் வர்க்கப் போராட்டமின்றி என்ற புக்காரின்; இந்த விவாதத் தளத்தில் தத்துவார்த்த துறை சார்ந்து நிறுவ முடியாது சிறுபான்மையான போது, அவர்கள் கோட்பாட்டு விவாதம் அல்லாத வழிமுறைகளை கையாளத் தொடங்கினர்.

ஸ்டாலின் பற்றிய லெனினின் கருத்தை எடுத்துக் கொண்ட லெனின் கட்சி, ஸ்டாலினை தொடர்ந்து கட்சிச் செயலாளராக தேர்ந்து எடுக்கின்றது. ஸ்டாலின் இல்லாத புதிய தலைவரை கட்சி கண்டறியவில்லை. கட்சி தனது போல்ஷ்விக் வரலாற்று போராட்டத்தினூடாக, தனது சொந்த தலைவரை தெரிந்து எடுப்பதில் உறுதியாகவே இருந்தது.

ஸ்டாலின் லெனினுக்கு பின்பாக பாட்டாளி வர்க்க தலைமையை முன்னெடுத்த போது, அவர் அதை பாதுகாப்பதில் என்றும் பின்வாங்கியதில்லை. பாட்டாளி வர்க்க வர்க்கப் போராட்டத்தை நடத்துவதில் அவரின் மரணம் வரை, அனைத்து சர்வதேச உறவுகளில் இருந்து உள்நாட்டு உறவுகள் ஈறாக உறுதியாக விட்டுக் கொடுக்காத பாட்டாளி வர்க்க தலைவராக இருந்தார். கோதா வேலைத்திட்டம் பற்றிய விமர்சனத்தில் மார்க்ஸ் கூறியத போல் ~~இங்கு நாம் கையாள வேண்டியது அதன் சொந்த அடித்தளத்தின் மீது வளர்ச்சியுற்ற என்கிற முறையிலான கம்யூனிச சமுதாயத்தைப் பற்றி அல்ல் ஆனால் மாறாக, முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து இப்பொழுது தான் உதிக்கும் சமுதாயத்தைப்பற்றி; அது பொருளாதார ரீதியில், அறிவுத்துறை ரீதியில் இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் இன்னமும் அது உதிக்கும் கருப்பையான பழைய சமுதாயத்தின் பிறப்புச் சின்னங்களால் முத்திரைக் குத்தப்பட்டிருக்கிறது. என்று மார்க்ஸ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதற்காக, ஏன் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று வரையறுத்தாரோ, அதை கையாள்வதில், விளக்குவதில், முன்னெடுப்பதில் உறுதியான வர்க்க நிலையை ஸ்ராலின் கையாண்டார். இதை ட்ராட்ஸ்கி, புக்காரின் போன்றவர்கள் எதிர்த்தனர். ஏன் இன்று ஸ்ராலினை தூற்றும் அனைவரும் இதை எதிர்க்கின்றனர்.

1.12.1934ம் ஆண்டு ஸ்டாலின் எதிர்ப்பு முன்னணி தலைவர்களின் இரகசிய சதி மூலம், ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பரும், முன்னணித் தலைவருமான கிரோவ் படுகொலை செய்யப்ட்டதைத் தொடாந்து, ஸ்டாலின் சதி மற்றும் நாச வேலையை கட்டுப்படுத்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க வேண்டியிருந்தது. இந்த படு கொலைக்கு முன்பாக நடந்த 17 வது கங்கிரசில் புகாரின், ரைகோவ், டோம்ஸ்கி போன்றோர் சுயவிமர்சனம் செய்தனர். ட்ராட்ஸ்கிய வாதிகளான ஜினோவிவ், காமனோவ் ஆகியோர் கட்சியை புகழ்ந்ததுடன், தமது தவறுகளை கடுமையாக சுயவிமர்சனம் செய்தனர். இவர்கள் இனியும் கருத்து தளத்தில் போராடி ஸ்ராலினை முறியடிக்க முடியாது என்பதால் சுயவிமர்சனத்தை செய்தபடி, இரகசியமான படுகொலைகள் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற சதி செய்தனர். இதை டிராட்ஸ்கிய நான்காம் அகிலம் சர்வதேச ரீதியாக முன்வைக்க, அதைப் பெருமைபட தொழிலாளர் பாதை தமது வீரதீரச் சதிச் செயலை முன்வைக்கின்றது. டிராட்ஸ்கி தனது சுய வரலாற்றில், தனது மகன் 1923 இல் இருந்தே சட்ட விரோதமாக, லெனின் உயிருடன் இருந்த போதே கட்சிக்கு எதிராக இயங்கியதாக பெருமையுடன் குறிப்பிடுகின்றார். இந்த சதிகளில் பங்குபற்றி இன்று உயிருடன் தப்பி வாழும் நபர்கள், இந்த சதியை பெருமைபட முன்வைக்கின்றனர். இந்த படுகொலை இரகசியக் குழுக்களில் இயங்கியோர் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர்.

இச் சதிகளில் ஈடுபட்ட முன்னணி தலைவர்கள் ஜனநாயக மத்தியத்துவத்தை கட்சியில் கடைப்பிடித்தார்களா? 1925 இல் 14வது காங்கிரஸ்சில் டிராட்ஸ்கி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்றும், புகாரின் அமைதியான முதலாளித்துவ வளர்ச்சியூடாக சோசலிசத்தை அடையாளம் என்றும், காமனோவ், ஜினோவிவ் பொருளாதாரத்தில் சோவியத் பிற்போக்காக இருப்தால் சோசலிசத்தை கட்ட முடியாது என்றும் முன்வைத்தனர். டிராட்ஸ்கி சோசலிசம் கட்ட முடியாது என்று கூறி அப்படி கட்டப்படின் ~~தோல்வியடையும் - அது வளராமல் தேங்கி நிற்கும் அல்லது நெப்போலியன் சர்வாதிகாரமாக முடியும் என்ற கூறி எதிர்த்து நின்றார். ஆனால் ஸ்டாலின், லெனின் தொடரக் கோரிய வர்க்கப் போராட்ட அரசியலை முன்வைத்தார். அரசும் புரட்சியும் என்ற நூலில் லெனின் ~~முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறுதலடைவது நிச்சயம் ஒரு பிரம்மாண்டமான மிதமிஞ்சிய மற்றும் பல்வேறு வகையான அரசியல் வடிவங்களை பெற்றுத் தராமலிருக்க முடியாது; ஆனால் சாராம்சத்தில் தவிர்க்க முடியாமல் ஒன்றாகவே இருக்கும்: பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்றார். இந்த மாற்றம் தொடர்பாக லெனின் ~~மீண்டும் தொழிற் சங்கங்கங்கள் மீது, தற்போதைய நிலைமையும் ட்ராட்ஸ்கி மற்றும் புகாரினது தவறுகளும் என்ற கட்டுரையில் ~~அரசியல் என்பது பொருளாதாரத்தின் மீது அரசியல் முன்னிலை பெறாமல் இருக்க முடியாது. வேறுவிதமாக வாதிடுவதன் பொருள் மார்க்சியத்தின் அரிச்சுவடியை மறப்பதாகும்.....எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு (குடிமக்கள் மீது) ஒரு சரியான அரசியல் அணுகு முறையின்றி வர்க்க ஆட்சியை நிலைநாட்ட முடியாது; அதன் விளைவாக அதன் சொந்த உற்பத்தி பிரச்சினையே தீர்க்க முடியாது என்று தொடர வேண்டிய சோசலிச புரட்சியின் வர்க்கக் கடமை பற்றி தெளிவுபடுத்துகின்றார். இதை புகாரின், டிராட்ஸ்கி மறுத்து ~~தனிநாட்டில் சோசலிசம் கட்ட முடியாது அல்லது மெதுவாக மாறும் என்ற போது, இதை ஸ்டாலின் கோட்பாட்டு ரீதியில் அம்பலம் செய்து முறியடித்தார். அங்கு இவைகளை விவாதிக்கும் உரிமை ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில், கட்சியில் கட்சி சுதந்திரம் தெளிவாக இருந்தது. கட்சியில் ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையிலான கருத்துச் சுதந்திரம் இருந்த போதும், 1926 இல் டிராட்ஸ்கி மற்றும் ஜினோவிய, கட்சிக்குள்; பகிரங்கமாகவே எதிர்க் குழுவைக் கட்டினர். கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாக கொண்ட மார்க்சியத்தை மறுக்கும் வடிவமாக இது உருவானது. இது பொது விவாதம், பெரும்பன்மை சிறுபான்மை கட்டுப்படும் கட்சி நடைமுறை, கட்சியில் பகிரங்கமாக கருத்தை வைக்கும் சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான நேர்மை, என அனைத்தையும் மறுத்தே, எப்போதும் குழுவடிவம் தோற்றம் பெறுகின்றது. இதன் தொடர்ச்சியாக 1927 இல் கட்சியில் விவாதம் ஒன்றை உருவாக்கி, தொழில் மயமாக்கல் தீவிரமாக்கவில்லை என்றும், விவசாயிகளை தொழிலாளருடன் இனைக்கும் கொள்கையை எதிர்த்தும், தொழிலாளர் விவசாயி முரண்பாடு இயல்பானது என்றும், அதை தீவிரமாக்கும் படி கோரி நடந்த கட்சி விவாதத்தில் அரசியல் ரீதியாக 1920 இல் நடந்தது போல் தோற்கடிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தமது சிறுபான்மை கருத்தை வைத்து கட்சிக்குள் போராடுவதற்கு பதில், மொஸ்கோ மற்றும் லெனின் கிராட்டில் பகிரங்கமான அரசுக்கு எதிரான ஆர்ப்பட்டத்தை செய்தனர். கட்சியின் எதிரிகளை துணைக்கு அழைத்தனர். இதன் தொடர்ச்சியில் தான் டிராட்ஸ்கி மற்றும் ஜினோவியும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இங்கு யார் கட்சி ஜனநாயகத்தை கேடாக பயன்படுத்தினர். யார் கட்சியின் உயிர்ரோட்டமான ஜனநாயகத்தை இழிவாக்கினர்? ஜனநாயக மத்தியத்துவத்தை மறுத்து, அதை அர்த்தமற்றதாக்கிய படி கட்சிக்குள் கட்சி கட்டி, கட்சிக்கு எதிராகவே போரட்டத்தை பகிரங்கமாக வெளியில் நடத்துகின்றவர்கள் பற்றி லெனின் என்ன கூறுகின்றார்.

~~இடதுசாரி கம்யூனிசம்... என்ற நூலில் லெனின் ~~ருசியாவில் நாங்கள் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு அல்லது கம்யூனிசத்தின் முதல் கட்டத்திற்கு மாறுவதில் முதல் படிகளின் வழியாகப் போகிறோம். (முதலாளித்துவ வர்க்கம் தூக்கியெறியப்பட்டதிலிருந்து மூன்றாவது ஆண்டில்) வர்க்கங்கள் நீடிக்கின்றன: பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரம் வெல்லப்பட்ட பிறகு பல ஆண்டுகளாக எங்கெங்கும் அவை நீடிக்கும். ஒரு வேளை இங்கிலாந்தில் அங்குதான் விவசாயிகள் இல்லை. (ஆனால் அங்கும் சிறு உடமையாளர்கள் இருக்கிறார்கள்) இந்த காலகட்டம் குறுகியதாக இருக்கலாம். வர்க்கங்களை ஒழிப்பதன் பொருள் நிலப்பிரபுகள், முதலாளிகளை விரட்டியடிப்பது மட்டுமல்ல - அதை ஒப்பீட்டு வகையில் எளிதில் சாதித்து விட்டோம். அதன் பொருள் சிறு பண்ட உற்பத்தியாளர்களை ஒழித்து கட்டுவதும் கூட ஆகும். அவர்களை விரட்டியடிக்க முடியாது அல்லது நசுக்க முடியாது; அவர்களோடும் இணக்கமாக நாம் வாழவேண்டும்; மிகவும் நீண்ட, நெடிய, மெதுவான, எச்சரிக்கையான ஸ்தாபன வேலையால் மட்டுமே மறுவார்ப்பும், மறுபோதனையும் செய்யமுடியும்; (செய்ய வேண்டும்) அவர்கள் குட்டி முதலாளித்துவ தன்னியல்போடு ஒவ்வொரு பக்கமும் முற்றுகையிடுகிறார்கள்; அதனால் பட்டாளி வர்க்கத்தக்குள் ஊடுருவி மாசுபடுத்துகிறார்கள்; அவர்களின் குட்டி முதலாளித்துவ முதுகெலும்பற்ற நிலை, ஒற்றமையின்மை, தனிமனிதப் போக்கு, எக்களிப்பு அல்லது சோர்வு என்ற மாறும் மனோநிலை ஆகியவற்றுக்கு பாட்டாளி வர்க்கத்தின் மத்தியில் பின்னிழுத்துத்தள்ள இடையராது காரணமாக இருக்கின்றார்கள். இதற்கு எதிர்விணையாற்றும் பொருட்டும், பாட்டாளி வர்க்கத்தின் ஸ்தாபனப்படுத்தும் பாத்திரத்தை (மேலும் அது பிரதான பாத்திரம்) சரியாகவும், வெற்றிகரமாகவும், வெல்லத்தக்கவாறும் செலுத்தும் பொருட்டும், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கட்சிக்குள் கறாரான மையப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடு தேவையாயிருக்கிறது. பழைய சமுதாயத்தின் சக்திகள் மற்றும் மரபுகளுக்கெதிரான இரத்தம் சிந்தியும், இரத்தம் சிந்தாமலும், வன்முறையாகவும் அமைதியாகவும், இராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், கல்வி துறையிலும், நிர்வாகத் துறையிலும் ஒரு இடையராத போராட்டமே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம். பத்து லட்சம் பல பத்து லட்சங்களின் பழக்க வழக்கங்களின் சக்தி ஒரு மிகப்பெரும் பயங்கரமான சக்தி. போராட்டத்தில் எஃகுறுதியாக்கப்பட்ட கட்சியின்றி, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தில் நேர்மையான அனைத்திடமும் நம்பிக்கையைப் பூரணமாகப் பெற்ற ஒரு கட்சியின்றி, பரந்துபட்ட மக்களின் மனோநிலையை கூர்ந்து நோக்கி செல்வாக்கு செலுத்தும் வல்லமையுடைய ஒரு கட்சியின்றி, இம்மாதிரியான ஒரு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது சாத்தியமில்லை. லட்சோப இலட்சம் சிறு உற்பத்தியாளர்களை வெல்வதை விட மத்தியத்துவப்படுத்தப்பட்ட பெரு முதலாளிகளை வென்றடக்குவது ஓராயிரம் மடங்கு எளிதானது; இருப்பினும் அவர்கள் தங்களது சாதாரமான, தினசரி புலனறிவுக்கு உட்படாத, நழுவக்கூடிய மனோதைரியத்தை இழக்கச் செய்யும் நடவடிக்கையின் மூலம் முதலாளிகளுக்குத் தேவையான முதலாளித்துவ வர்க்கத்தை திரும்ப நிலை நாட்டுவதற்கு விழையும் அதே விளைவைச் சாதிக்கிறார்கள். பாட்டாளி வர்க்கக் கட்சியின் எஃகுறுதி வாய்ந்த கட்டுப்பாட்டை எவரொருவர் சிறுமைப்படுத்துகிறாரோ (குறிப்பாக அதன் சர்வாதிகார காலங்களின் போது) அவர் உண்மையில் பாட்டாளி வர்க்கத்திற்கெதிராக முதலாளித்துவ வர்க்கத்திற்கு உதவுகின்றார் என்று மார்க்சியத்தை தெளிவுபடவே வரையறுக்கின்றார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஆணையில் வைத்து, வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் கட்சிக்கு, எதிராக ஜனநாயக மத்தியத்துவத்துக்கு புறம்பாக நடத்தப்படும் எல்லாவிதமான செயற்படும், முதலாளித்துவ மீட்சிக்கான முயற்சியேயாகும். ஒருநாட்டில் சோசலிசத்தை கட்டமுடியுமா என்ற அடிப்படையான விடையம் தொடர்பாகவும், மாற்றுக் கருத்துக்கு 1920, 1930 களில் கருத்துச் சுதந்திரத்தை கட்சி வழங்கிவிடவில்லை என்று யாரும் நிறுவிவிடமுடியாது. அத்துடன் அங்கு ஜனநாயக மத்தியத்துவம் கட்சியின் பிரதான ஜனநாயக வடிவமாகவும் இருந்தது. இதை யாரும் மறுக்க முடியாது. டிராட்ஸ்கி முதல் பலரும் தமது கருத்தை கட்சியில் வைத்து விவாதிக்கவில்லையா? அங்கு தோற்கடிக்கப்பட வில்லையா?

1927 இல் கட்சிக்கு எதிராக ட்ராட்ஸ்கி, ஜினோவிய தலைமையில் லெனின்கிராட், மஸ்கோவில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் எதிரிகள் உசார் அடைந்தனர். குலாக்குகள் அரசுக்கு தனியத்தை விற்க மறுத்தனர். அதே நேரம் புகாரின் - ரைகோவ் குலாக்குகள் மீது கடுமையான தாக்குதல் அவசியமில்லை என்றனர். புகாரின் விவசாயிகளைப் பார்த்து நீங்கள் (விவசாயிகள்) உங்களை வளப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். மேலும் அவர் சோசலிசத்தை கட்டுவதைப் பற்றி ~~நாங்கள் மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து முன்னேறுவோம். பெருந்தொகையான குடியான்கள் என்ற வண்டியை நாம் எம்மோடு இழுத்துச் செல்ல வேண்டும் என்றார். கைத்தொழில் மயமாக்கல் மக்களுக்கு பெரும் சுமை என்ற கூறி, அதை கைவிடக் கோரினர். ஆனால் ஸ்டாலின் இதை மறுத்து வர்க்கப் போராட்டத்தை தொடுக்க கட்சிக்கு வழிகாட்டினார். மற்றவர்கள்; தமக்கிடையில் உள்ள முரண்பாட்டை விட, ஸ்ராலினை எதிர்ப்பது முக்கியமானது என்ற முடிவுக்கு வந்தனர். வர்க்கங்களை சமரசம் செய்து கொண்டு செல்ல தெரியாத சதிகாரனாகவும், அதில் கொள்கையற்றவனாகவும் ஸ்ராலினை வருணித்து, இரகசியமாக சதி செய்யவும் தயங்கவில்லை. ~~அவன் கொள்கைகள் அற்ற சதிகாரன்: பழிவாங்கவும் முதுகில் குத்தவும் மட்டுமே அவனுக்குத் தெரியும் என்றான் புகாரின். கூட்டுப் பண்ணையாக்கலில் சலுகை வழங்கிய போராட்டத்தை கோரிய போது (அதாவது ~~நமது விசாலமான விவசாய வண்டியை நம் பின்னால் இழுத்துக் கொண்டு சிறுசிறு எட்டுகள் வைத்து நாம் முன்னேறுவோம் என்று புகாரின் கட்சியிடம் சலுகையாக கேரிய போது), இங்கு வலதுக்கும் இடதுக்கும் இடையில் கட்சி போராடிய போது, சலுகையின் அடிப்படையில் கொடுத்த வலது இடது ஆதாரவை, அடுத்தகட்ட வர்க்க ஒழிப்பில் கட்சி மறுத்த போதே, இப்படி புகாரின் வருணித்தார். வலதுக்கும் இடதுக்கும் இடையில் கட்சி தனது வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்த போது, இடதை எதிர்க்கும் போது வலதும், வலதை எதிர்க்கும் போது இடதும் பெற்ற சலுகைகளை எதிர் கொண்டே, ஸ்ராலினின் வலதுக்கும் இடதுக்கும் எதிரான இரண்டு பக்க போராட்டத்தையே கொள்கையற்றதாக வருணித்து, சதியாக வருணிக்க முடிகின்றது. இங்கு இடது வலது அல்ல பிரச்சனை, இதை அடிப்படையாக கொண்ட வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதா? இல்லையா? என்பதே பிரச்சனை. இதற்கு எதிரான போக்கே சதியாகும். வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் போக்குக்கு எதிரான போராட்டத்தையே, சதியாக வருணிப்பது ஸ்டாலின் எதிர்ப்பின் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். புகாரின் இதற்காக இரகசிய சதிகளில் ஈடுபட்டதை தொடர்ந்தே, புகாரினை கட்சியின் மத்திய குழுவில் இருந்தும், கட்சியில் இருந்தும் வெளியேற்றியது.

கட்சியின் உயிரோட்டமான கருத்துச் சுதந்திரத்தை, சதிப்பாணியிலான வடிவத்துக்கு நகர்த்திச் சென்றதில், ஸ்டாலின் எதிர்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. உள்ளடக்கத்தில் சதிகளின் மூலம் கட்சியின் பெருபான்மையை எதிர்க்க கிளம்பிய போது, கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை முறைகேடாக கையாண்டனர். ஸ்ராலினை ஏன் எதிர்த்தார்கள். அதாவது ஸ்ரானிலிசம் என்று எதை இன்றும், அன்றும் அடையளப்படுத்துகின்றனர். ~~ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட (வர்க்கப் போராட்டத்தை தொடர) முடியுமா? இல்லையா? என்ற அடிப்டையான கேள்வி மீதே, இது மையப்படுகின்றது. ஸ்ராலினிசியமாக இருப்பது ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்ற தொடரும் வர்க்கப் போராட்டப் பாதையே. இதை எதிர்ப்போர் கட்டமுடியாது என்பதன் மூலம், வர்க்க சராணாகதியை கோரினர். ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்பது ஸ்ராலினிசியம் என்றால், அது லெனிசமாக இருக்கின்றது. அதைப் பார்ப்போம்;.

1915 இல் முதலாம் உலக யுத்தம் தொடங்கிய பின்பு மென்ஷ்விக்குள் ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்ற போது, டிராட்ஸ்கியும் இது சாத்தியமில்லை என்றார். ஆனால் லெனின் ~~ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் என்ற முழக்கம் பற்றி என்ற கட்டுரையில் ~~ஒரு தனிப்பட்ட முழக்கம் என்கிற வகையில் உலக ஐக்கிய நாடுகள் என்பது சரியானதாக இருக்க முடியாது. எனெனில் இதற்கு, ஒரு தனி நாட்டில் சோசலிசத்தின் வெற்றி சாத்தியமானதல்ல என்று தவறான பொருள் வழங்கப்படக்கூடும் என்றார். லெனின் புரட்சிக்கு பின்பு ~~ரசியாவில் பழைய நிலை திரும்பி வருவதற்கு எதிரான ஒரே உத்திரவாதம், மேற்கு நாட்டில் ஏற்படுகிற ஒரு சோசலிசப் புரட்சிதான். ஆனால் இதை நினைத்த மாத்திரத்தில் வரவழைக்கக் கூடிய ஒரு நிலையில் நாம் இல்லை. ஆனால் ஒரு சார்பு நிலையான, நிபந்தனைக்கு உட்பட்ட ~உத்திரவாதம் ஒன்று உண்டு. ரசியாவில் கூடுமான வரை மிகமிக விரிவான விளைவுகள் ஏற்படுத்துகின்ற, முரணற்ற, உறுதியான முறையில் புரட்சியை நிறைவேற்றுவதில்தான், பழைய நிலை திரும்பி வருவதற்கு எதிராகக் கூடுமான வரையில் மிகவும் சாத்தியமான தடைகளை எழுப்புவதில் பொதிந்துள்ளது. என்றார். இதுதான் 1925 களில் மீளத் தொடங்கிய அரசியல் விவாதத்தின் அடிப்படையும், உள்ளடக்கமாகும். அதாவது ஸ்ராலினிசமாகவும் அதன் மீதான எதிர்ப்பாகவும் இருப்பதன் அரசியல் உள்ளடக்கமும் இதுதான். ஆனால் ஸ்டாலின், லெனின் ஓரே கட்சியின் நீண்ட காலத் தலைவர் என்ற வகையில், லெனினியத்தை முன்னெடுப்பதில் வேறு யாரையும் விட முன்னணியில் இருந்தார். லெனின்; ஏழாவது காங்கிரஸ்சில் ~~ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க அரசின் கரங்களில் உள்ள பொருளாதாரச் சக்தியானது, கம்யூனிசத்தை நோக்கிய மாறுதலை உறுதி செய்ய போதுமானது. என்றார். கூட்டுறவு பற்றிய கட்டுரையில் ~~நம்மை இப்போது எதிர்கொண்டிருப்பது இக் கலாச்சார புரட்சிதான். இக்கலாச்சாரப் புரட்சியானது, நம் நாட்டை ஒர் முற்றிலும் சோசலிச நாடாக உருவாக்குவதற்கு போதுமானது என்றார். இது போல் லெனின் பல தரம் இதை விரிவாக்கியுள்ளார். இதை ட்ராட்ஸ்கி தொடர்ச்சியாக எதிர்த்ததுடன், இதையே ஸ்ராலினிசமாக, லெனினை முடி மறைத்தபடி மார்க்சியத்துக்கு எதிரானதாக காட்டினர்.

ஒரு நாட்டில் புரட்சிக்கு பின்பு வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து சோசலிசத்தை கட்டுவதா இல்லையா என்ற கேள்விக்கு டிராட்ஸ்கி ~~தோல்வியடையும் -அது வளராமல் தேங்கி நிற்கும் அல்லது நெப்போலிய சர்வாதிகாரமாக முடியும் என்றதன் மூலம், ஸ்ராலினை எதிர்த்தன் மூலம், மீளவும் பழைய மென்ஷ்விக்குகள் நிலையில், லெனினை மறுத்து நின்றார். இதை பின்னால் இழிவாக்கி ஸ்ராலினிசமாக்கினார். ஸ்ராலினுக்கு பதில் ட்ராட்ஸ்கி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும். ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியாது. அது தேங்கிவிடும் அல்லது சர்வாதிகார நெப்போலியன் ஆட்சியாகி விடும் என்று கூறிய படி, பழையதுக்கு திரும்பிச் செல்வதையே முன்வைத்திருக்க முடியும். இதைத் தாண்டி அவரால் தனது கோட்பாட்டுக்கு விளக்கம் சொல்ல முடியாது. இதைத்தான் இன்று தூக்கி பிடித்து காவடி எடுப்பதன் மூலம், முன்வைக்கும் ஸ்டாலின் எதிர்ப்பின் வர்க்க நோக்கம் தெட்ட தெளிவானவை. இந்த அரசியல் உள்ளடகத்தில் தான் ஸ்டாலின் முரண்பாடு உருவாகின்றது. கட்சி எதற்காக உருவாக்கி, எதற்காக போராடி புரட்சியை நடத்தியதோ (இந்த போராட்டத்தில் ட்ராட்ஸ்கி எதிர்த்தே நின்றவர்), அந்த கட்சியின் நோக்கத்தை எதிர்த்த போது, கட்சியில் தொடர்ச்சியாக தோற்றுப் போனர்கள்;. கட்சி இவைகளை விவாதிகவும், கருத்தை வைக்கவும் வழங்கிய ஜனநாயக மத்தியத்துவத்தையும், அரசியல் அதிகாரத்தையும் முறை கேடாக பயன்படுத்தினர். கட்சியின் ஜனநாயகத்தை குழதோண்டி புதைத்தன் மூலம், சதிகளை திட்டமிட்டனர்.

லெனின் தொடரும் வர்க்கப் போராட்டத்தைப் பற்றி பஞ்சத்தை முறியடிப்பது என்ற அறிக்கையில் ~~ஆ! தொழிலாளர் வர்க்கம் பழைய முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து ஒரு இனப்பெருஞ் சுவற்றால் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் ஒரு தனி நபர் இறந்து போகும் விவகாரத்தில், இறந்தவர் சாதாரணமாகத் தூக்கிச் சென்று விடப்படுவதைப் போல் புரட்சியின் போது நடப்பதில்லை. பழைய சமுதாயம் சிதைவுறும் போது அதன் பிணத்தை சவப்பெட்டியில் வைத்து ஆணியடித்து சவக்குழியில் புதைத்து விட முடியாது. நமது மத்தியிலேயே அது உருக்குலைகிறது. பிணம் அழுகுகின்றது. நமக்கு நச்சிடுகிறது. என்றார். எதிரி வர்க்கத்தைச் சார்ந்து கட்சியின் சிறுபான்மை, எதிர் புரட்சிக்கு முயற்சி எடுத்தது. நச்சிட்டது.

புரட்;சி நடந்த நாடுகளில் இருக்கக் கூடிய பொது விதி கூட. சோவியத்தில் நடந்தவை வர்க்கப் போராட்டத்தின் புற நிலைமையின் விளைவே ஒழிய, ஸ்டாலின் தனிபட்ட அகநிலையோ, நாட்டின் பொதுவான நிலைமையோ அல்ல. மாறாக வர்க்கப் போராட்டத்தின் வேறுபட்ட வர்க்கத்தினை பிரதி செய்தவர்களின், ஜனநாயக விரோத வன்முறை அரசியல் தான் மஸ்கோ விசாரனையாகும்.

வர்க்கப் போராட்டத்தை சிதைக்க முயல்பவர்களை எதிர்த்து எப்படி போராட வேண்டம் என்பதை லெனின் சோவியத் அரசாங்கத்தின் உடனடிக் கடமைகள் என்ற பிரசுரத்தில் ~~முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கான ஒவ்வொரு மாறுதலின் போதும் இரண்டு முக்கிய காரணங்களுக்காக அல்லது இரண்டு முக்கிய வழிகளில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியம். முதலாவதாக சுரண்டலாளர்களின் எதிர்ப்புகளை இரக்கமற்ற முறையில் நசுக்குவது இன்றி முதலாளித்துவம் வீழ்த்தப்படவும் ஒழித்துக்கட்டப்படவும் முடியாது. சுரண்டலாளர்களிடமிருந்து அவர்களது செல்வத்தை அறிவிலும் அமைப்புத் துறையிலும் அவர்களுக்கு உள்ள சாதகத்தை உடனடியாகப் பறித்துவிட முடியாது. அதன் பயனாய் அவர்கள் வறியவர்களின் வெறுக்கத்தக்க ஆட்சியை (ஒரு நீண்ட காலத்திற்கு) தூக்கியெறிவதற்குத் தவிர்க்க முடியாமல் முயன்று கொண்டிருப்பார்கள். இரண்டாவதாக ஒவ்வொரு மாபெரும் புரட்சியும் குறிப்பாக ஒரு சோசலிசப் புரட்சியும் உள் நாட்டு யுத்தம் இல்லாமல் நினைத்துப் பார்க்கமுடியாது.... ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான ஊசலாட்டங்களையும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு ஓடுகின்ற உதாரணங்களையும் உள்ளடக்கியதாகும்.... முந்தைய புரட்சிகளின் துரதிஷ்டம் என்னவென்றால் உருக்குலைக்கும் கூறுகளை ஈவு இரக்கமின்றி நசுக்க மக்களுக்கு பலத்தைத் தொடுக்கவும், அவர்களை ஒரு இறுக்கமான நிலையில் வைத்திருக்கவுமான புரட்சிகர உற்சாகம் நீண்ட காலத்திற்கு நீடிக்காதுதான் பரந்துபட்ட மக்களின் இந்த புரட்சிகர உற்சாகத்தின் நிலையின்மைக்கான சமுதாய வர்க்கக் காரணம் பாட்டாளி வாக்கத்தின் பலவீனம்தான்.... என்று தெளிவுபடவே விளக்குகின்றார். இதைத் தான் ஸ்டாலின் ~ஒருநாட்டில் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதற்கு எதிரான, சதிக் குழுக்களை ஈவிரக்கமின்றி ஒடுக்க போராடினர். இதில் தோற்றப் போய்யிருந்தால் 1956 இல் குருசேவ் உருவாகியிருக்க வேண்டிய வரலாறு தோன்றிருக்காது. அது 1930 களிலேயே ஏற்பட்டு இருப்பதுடன், பாசிசம் உலகை ஆண்டிருக்கும்.

ஸ்டாலின் வர்க்க முரண்பாடு தொடர்ந்து இருப்பதாக, மார்க்சியத்துக்கு புறம்பாக இட்டுக் கட்டியே இந்த சதி பற்றி கற்பித்ததாக இடதுசாரி வேடதாhரிகள் மார்க்சியத்தை திரிக்கின்றனர். வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு பின்பு மிக தீவிரமாக மாறுவதுடன், எல்லாவிதமான முறையிலும் எதிரி வர்க்கம் போரட்டத்தை முன்னெக்கின்றது. இது ஸ்டாலின் கற்பனையல்ல. இது மார்க்சியத்தின் அரசியல் உள்ளடக்கம். இதையே ஸ்டாலின் முன்னெடுத்தார். இவை பற்றி மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் அதிக அனுபவத்தை நடைமுறையில் சந்திக்க விட்டாலும், முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றுவாய்கள் பற்றி பலமுறை குறிப்பிட்டே எழுதியுள்ளனர். அவைகளை நாம் பார்ப்போம்.

மார்க்ஸ் ~~பிரான்சில் வர்க்கப் போராட்டம் என்ற தலைப்பில் பொதுவாக வர்க்க வேறுபாடுகளை ஒழித்துக் கட்டுவதற்கு, அவை தங்கியிருக்கும் எல்லா உற்பத்தி உறவுகளைனயும் ஒழித்துக் கட்டுவதற்கு, இந்த உற்பத்தி உறவுகளுக்குப் பொருத்தமான எல்லா சமூக உறவுகளையும் ஒளித்துக் கட்டுவதற்கு, இந்த சமூக உறவுகளில் இருந்து விளையும் எல்லாக் கருத்துகளையும் புரட்சிமயமாக்குவதற்கு அவசியமான மாறுதலுக்கான முறை என்கிற வகையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, புரட்சியின் நித்தியத்துவத்தைப் பிரகடனப்படுத்தவது சோசலிசம் என்றார்.

இதையே லெனின் ~~வர்க்கங்களை ஒழிப்பது ஒரு நீண்ட, இடர்பாடுகள் மிக்க மற்றும் உறுதியான வர்க்கப் போராட்டத்தைக் கோருகிறது. மூலதனத்தின் அதிகாரம் தூக்கியெறியப்பட்ட பிறகு முதலாளித்துவ அரசு நொருக்கப்பட்ட பிறகு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்பட்ட பிறகு (பழைய சோசலிசம், மற்றும் பழைய சமூக ஜனநாயகம் ஆகியவற்றின் ஆபாசமான பிரதிநிதிகள் கற்பனை செய்வது போல்) வர்க்கப் போராட்டம் மறைந்து விடுவதில்லை; மாறாக வெறுமனே அதன் வடிவங்களில் மாறுதலடைகிறது; மேலும் பல விவகாரங்களில் மிகவும் கடுமையானதாக மாறுகின்றது என்றார் லெனின்.

இதை மேலும் அவர் ~~பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் அரசியலும் பொருளாதாரமும் என்ற பிரசுரத்தில் ~~பாட்டாளி வர்க்கத்தின் கீழ் சுரண்டும் வர்க்கத்தினர், அதாவது முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் மறைந்து விடவில்லை; எல்லோரும் ஒரே சமயத்தில் மறைந்து விடவும் முடியாது, சுரண்டலாளர்கள் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒழிக்கப்பட்டுவில்லை... இன்னமும் விசாலமான சமூகத் தொடர்புகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாலேயே அவர்களது எதிர்ப்பின் சக்தி ஒரு நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு அதிகாரிக்கின்றது. மக்கள் தொகையில் இருக்க வேண்டியதில் அவர்களது எண்ணிக்கையை விட ஒப்பிட முடியாத அளவு மிகப் பெரும் முக்கியத்துவமுடையதான வகையில் அரசு, இராணுவம் மற்றும் பொருளாதார நிர்வாகத்தின் ~கலை அவர்களுக்கு மேலாண்மையை, ஒரு மிகப்பெரிய அளவிலான மேலாண்மையைக் கொடுக்கின்றது. வென்ற சுரண்டப்படுபவர்களின் முன்னணிக்கு அதாவது பாட்டாளி வர்க்கத்தக்கு எதிராக தூக்கியெறியப்பட்ட சுரண்டலாளர்கள் தொடுக்கும் வர்க்கப் போராட்டம் ஒப்பிட முடியாதவாறு கசப்பானது. மேலும் புரட்சியைப் பற்றி பேசுகையில், இந்தக் கருத்தோட்டம் சீர்திருத்த மாயைகளால் இடமாற்றம் செய்யவில்லையானால், இது வேறானதாக இருக்கமுடியாது. என்றார் லெனின். இதைத் தான் ஸ்டாலின் பின்பற்றினர். லெனின் வர்க்க போதனைகளை உறுதிபட முன்னெடுப்பதில் அவர் இரும்பாக அதாவது ஸ்ராலினாக இருந்தார்.

நன்றி :http://marxistbase.blogspot.com/

Monday, July 28, 2008

உலக தத்துவ ஞானி சாக்ரடீஸ்

மதவாதிகளை நோக்கி "கடவுள் என்பவர் யார்?" எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர், சாக்ரடீஸ் தான்.

உலகம், அறியாமை இருளில் மூழ்கித் தவித்தது. இடி,மின்னல்,வெள்ளம்,பூகம்பம் ஆகியன போன்ற இயற்கையின் திருவிளையாடல்களைக் கண்டு மக்கள் மிரண்டனர்.வாழ்வில்,மரணபயம் அழுத்தியது.

மக்கள் மனதில் வளர்ந்த அச்சம் காரணமாகக் கண்டவற்றையெல்லாம் கடவுளாகக் கருதி வணங்கத் தொடங்கினான். கடவுளிடத்தில் ஆத்மார்த்த பக்தி கொள்வதற்கு பதிலாக அச்சமே கொண்டிருந்தான்.

மக்களின் மனம் வளர்ச்சி பெறாத அந்தக் காலத்திலேயே இயற்கயின் நிகழ்வுகள் ஏற்பட என்ன காரணம் எனக் கேள்விக்கணைகள் தொடுத்தவர் சாக்ரடீஸ். அவர், வெறும் நம்பிக்கையே ஆதாரமாகக்கொண்டு வாழ்ந்த மனிதனைச் சிந்திக்கவும் தூண்டினார்.(அது தான் மிகப்பெரிய தவறான செயலாச்சே)அதனால் அவர் கடவுள் நம்பிக்கையற்றவர்,கடவுள் வெறுப்பாளர்,மக்களின் மனதை மயக்கும் மாயப்பிசாசு என்றும், சிந்தனை என்னும் பொருளற்ற சொல்லைப்பயன்படுத்தி,எதுவும் அறியாத இளைஞர்களின் மனத்தை பாழ்படித்துகிறார்.இந்நாட்டின் முதல் பகைவர் என,ஏதென்ஸ் நகரப் பிற்போக்குவாதிகளால் குற்றஞ்சாட்டப்பட்டார். அதுமட்டுமல்ல,அவரைக் குற்றவாளி என நீதி மன்றத்தில் நிறுத்தினர்.முடிவில் அவருக்கு மரணதண்டனை என்னும் பெயரில் நஞ்சுக்கோப்பை அளிக்கப்பட்டது சாக்ரடீஸ் அமைதியாகப் பகைவர்கள் நஞ்சினை மக்களின் சிந்தனை வளர்ச்சிகாக அமுதமாக நினைத்து அருந்தினார்.

சாக்ரடீஸின் சித்தாந்தம்:

சிந்திப்பதும்,சிந்தனையில் தோன்றுவதைச் சொல்லுவதும் தனி மனிதனின் பிறப்புரிமையாகும். அதனைத் தடுக்கவோ தட்டிக்கேட்கவோ எவருக்கும் உரிமை இல்லை.
நடமுறையில் குடியாட்சிமுறை இருந்தாலும்,சமுதாயத்தின் உயர்மட்டத்தில் வாழ்பவர்,மக்களை அடிமைகளாக நடத்துகிறார்கள். ஓழுக்கமே இல்லாதவர் ஒழுக்கத்தைப்பற்றிப் போதிக்கிறார்கள். உண்மையான மக்களாட்சி மலர வேண்டுமானால் மனிதன் சிந்திக்க வேண்டும்.இவ்வாறு கூறினார் சாக்ரடீஸ்.
இன்னல்களுக்கும், ஆசைகளுக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் மனிதன் எவ்வாறு வாழவேண்டும் எனவும் அவர் போதிக்கிறார்.

மனத்தூய்மையின் அவசியத்தை எடுத்துக்கூறி,ஒழுக்கசீலர்களாக மக்கள் வாழ முயலவேண்டும் எனவும் சாக்ரடீஸ் சுட்டிக்காட்டினார்.

கொள்கையில் உறுதி உடையவராக விளங்க வேண்டும், என்றும் கொள்கைப்பிடிப்பில்லாதவர் குள்ளநரியை விட கொடியவராவர்.இலட்சிய வெறியோ இல்லாதவர், வாழ்க்கையில் சிறப்பினை அடைய முடியாது. அவரால் அவருக்கும் சமுதாயத்திற்கும் எவ்வித நலனும் இல்லை என்பதனை வலியுறுத்திக்கூறினார்.

தன்னடக்கம்,சிந்தனைத் தெளிவு,நல்லொழுக்கம்,கருணை,பணிவு,கட்டுப்பாடு,புலனடக்கம்,நேர்மை ஆடிய பண்புகளே உண்மையான ஞானமாகும். இவையே வாழ்வின் வெற்றிக்குரிய திறவுக்கோல் எனப் போதித்தார்.

பிறப்பு:

நாகரிகமற்ற நாடுகளுக்கு மத்தியில், புராதன காலத்திலேயே,ஒரளவிற்கு நாகரிகத்துடன் விளங்கியது ஏதென்ஸ் நகரம். அதற்குக் காரணம், அண்டை நாடுகளிலிருந்த வணிகர்களும் செல்வந்தர்களும் ஏதென்ஸில் வந்து தங்கியமையேயாகும்.

கிறிஸ்து பிறப்பதற்க்கு ஏறத்தாழ 500ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது,கிமு.469 ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில்,ஏழைக் குடுப்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் ஒரு சிற்பி. இவர் தாயார் ஒரு மருத்துவச்சி."காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்னும் முதுமொழிக்கு ஏற்ப அப்பெற்றோர்கள் அவலட்சணமாகப் பிறந்த தங்கள் குழந்தையை சீராட்டி பாராட்டி வளர்த்தனர்.

சாக்ரடீஸ் தன் குடும்பத்தைப்பற்றி கவலைபடாமல் ஏதென்ஸ் நகரின் இயற்கை அழகில் சுற்றித்திறிந்தார்.அக்காலத்தில், இந்நாள் போல் முறையான கல்விப்பயிற்சிக்கு வழியில்லை என்றாலும்,சாக்ரடீஸ் சுயமாக தன் அறிவினை வளர்த்துக்கொண்டார்.

வாலிபப் பருவம் எய்திய சாக்ரடீஸிக்கு தம் குடும்பத்தின் வறுமைநிலை புரியத் தொடங்கியது.எனவே அவர் தம் சிந்தனைக்கு சற்று ஒய்வு கொடுத்தார் தம் தந்தைக்கு சிலகாலம் உதவியாக இருந்தார்.

ஏதென்ஸ் நகரத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் விட்டுக்கொரு பிள்ளையைக் கட்டாயமாக இராணுவத்திற்கு அனுப்பவேண்டும் என்பது சட்டம். எனவே சாக்ரடீஸ் பெற்றோர்கள், அவரை இராணுவத்தில் சேர்த்தனர்.
சாக்ரடீஸ் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இராணுவத்தில் பணிப்புரிந்தார்,பின்பு ஒய்வு பெற்றதும் வீடு திரும்பினார். பின்பு அவர் குறிப்பிடும்படியாக ஒரு வேலையும் செய்யவில்லை.

கலையில் எழுந்து வெளியில் சுற்ற கிளம்பிவிடுவார்.எதிர்ப்படுகிறவர்களிடம் எல்லாம் ஏதாவது ஒரு வினா தொடுப்பார்.அவர்கள் அதற்குப் பதில் தெரியாமல் விழிப்பார்கள்.அவர்களிடம் அடுத்தடுத்த வினா எழுப்பு விடையை வரவழைத்து, அவர்கள் அறிவு விளக்கம் பெற செய்வார்.

மக்கள் கூடும் இடங்களில் நின்றுகொண்டு சாக்ரடீஸ் உரக்கப் பேசுவார். அவர் பேச்சைக்கேட்டு இளைஞர்கள் தேனுண்ட வண்டுக்களைப்போல மயங்கி நிற்பார்கள். இவ்வாறு சாக்ரடீஸ் ஏதென்ஸ் நகர இளைஞர்களுக்கு அறிவு புகட்டும் பணியைச் செய்து வந்தார்.
சாக்ரடீஸின் அறிவு வன்னையை உண்ர்ந்த செல்வந்தர்கள், தங்கள் பிள்ளைகளை அவரிடம் கல்வி கற்க அனுப்பினர்.அவர்களுள் ஒருவர் தான் தத்துவ மேதை பிளாட்டோ.

சாக்ரடீஸ் தம் அறிவாற்றலால் ஏதென்ஸ் நகர மக்களின் கவனத்தைக் கவர்ந்தார். அவரது ஆழ்ந்த சிந்தனையும் சிறந்த நாவன்னையும் அவருக்கு மக்களிடயே நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன.

சாக்ரடீஸ் தம் மனைவி, மக்களை மறந்தார். குளிர்.வெயில்,மழை ஆகியவற்றைத் துச்சமெனக் கருதினார்.துறவி போல் வாழ்ந்தார். ஏதென்ஸ் நகர எல்லைகுள்ளே சுற்றித் திரிந்தார்.பேசிக்கொண்டே இருந்தார். அவர் பணத்திற்காகவோ,புகழுக்காகவோ பேசவில்லை.உலகம் என்றென்றும் மறக்க முடியாத உயர்ந்த உண்மைகளைப்பற்றி பேசினார்.

ஒரு நாள் சாக்ரடீஸுக்கும் நண்பருக்கும் இடையே அழகு பற்றி விவாதம் எழுந்தது. அழகு என்றால் என்ன? எனக் சாக்ரடீஸ் தம் நண்வரைக் கேட்டார்.அதற்கு அவர்"அது ஒரு பெண்ணிடம் அமைந்திருப்பது"என்றார். உடனே சாக்ரடீஸ் "குதிரைகூட அழகாகத்தான் இருக்கிறது. ஏன் பானைக்கூட அழகாகத்தான் இருக்கிறது என்றார்.அது கேட்டு நண்பர் குழப்ப முற்றார். அப்பொழுது சாக்ரடீஸ், நண்பா! ஓர் அழகான பானை இருக்கிறது. அதனுள் சுவையான உணவுப் பண்டம் இருக்கிறது. அந்த உணவை எடுக்க எது வேண்டும்? தங்கக் கரண்டியா,மர அகப்பையா? எது பிறருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறதோ,அதுதான் அழகு என்று விளக்கினார்.

இதுபோன்று எளிய கேள்வி - பதில் முறையில் அவரது சித்தாந்தம் விளக்கப்பட்டிருக்கும்.
வாழும்வரை நியாயமாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் வாழவேண்டும்.பிறருக்கு நன்மை செய்யாதவன் கடவுளை வழிபடுவதால் அவனுக்கு நன்மை ஏற்பட வாய்பே இல்லை என்று அவர் அறிவுறுத்தினார்.

திருமணம்:

சாக்ரடீஸ் இருமுறை திருமணம் செய்துக்கொண்டவர். முதலில் மெர்ட்டன் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.அவளுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தன.அவள் அடக்கமானவள்,சாக்ரடீஸ் மீது அன்பும்,மதிப்பும் வைத்திருந்தாள்.பின்பு அவள் மறைவுக்கு பிறகு தன் இரு குழந்தைக்காக சாந்திபீ என்னும் பெண்ணைத் திருமணம் செய்துக்கொண்டார்.ஆனால் அவள் கணவனின் நடைவடிக்கை பிடிக்காமல் திட்டி திர்த்துக்கொண்டு இருந்தாள்.தமது கணவன் பேச்சு எல்லாம் வீண்பேச்சு என்று சொல்லி திட்டுவாள்.

ஒரு முறை சாக்ரடீஸ் பகுத்தறிவுக் கொள்கையைப்பற்றி நண்பர் ஒருவரிடம் தம் விட்டின் முன் நின்று விவாதம் செய்துக்கொண்டிருந்தார்.ஆதலால் தன்னை சுற்றியிருப்பவர்களை மறந்தார்.அவர் மனைவி நீண்ட நேர அழைத்தும் சாக்ரடீஸ் காதுகளில் விழவில்லை. இதனால் கோபம் அடைந்த அவர் மனைவி கண்டபடி கடிந்து பேசினாள்.அப்பொழுதும் சாக்ரடீஸ் பேச்சை நிருத்தவில்லை.இதனால் சினம் கொண்டு பாத்திரத்தில் தண்ணிர கொண்டுவந்து சாக்ரடீஸின் தலையில் கொட்டினாள். எதிபாராத இச்செயலைக்கண்ட சாக்ரடீஸுக்கு தர்மசங்கடமாகிவிட்டது.ஆனால் சாக்ரடீஸ் தம் நண்பரிடம் அதிர்ச்சி கொள்ளாமல்,நாண்பா இவ்வளவு நேரம் வானம் மின்னியது,இடி இடித்தது,இப்பொழுது மழை பெய்தியிருக்கிறது அவ்வளவுதான் என அமைதியாக பதில் கூறினார்.பின்பு இதுபோல் பல சம்பவங்களால் சாந்திபீ மனதில் மாற்றம் ஏற்பட்டது.

மக்களைத் திருத்தியது மாபெரும் குற்றம்:

சாக்ரடீ்ஸின் செய்கை அரசாங்க அதிகாரிகளை ஆத்திரமடையச் செய்தது. இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கினால் தங்களால் அமைதியாக ஆட்சி நடத்த முடியாது என அவர்கள் கருதினர்.எனவே தம்போக்கை மாற்றிக்கொள்ளும்மாறு அவர்கள் சாக்ரடீஸை எச்சரிக்கை செய்தனர் ஆனால் சாக்ரடீஸ் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு அடிப்பணியவில்லை.அதனால் அதிகாரிகளின் கோபம் எல்லை மீறியது.அவர்மீது அவர்கள் குற்றம் சுமர்தினர்.

சாக்ரடீஸ் ஏதென்ஸ் நகரக் கடவுள்களை நம்ப மறுக்கிறார். மக்கள் மனதிலும் கடவுள்மீதுள்ள நம்பிக்கையை இழக்குமாறு செய்கிறார்.பலவாறு பேசி ஏதென்ஸ் நகர இளைஞர்களின் மனதைக் கெடுக்கிறார்.

இவ்விரு குற்றங்களைச்சுமர்த்தி அரசாங்க அதிகாரிகள் சாக்ரடீஸைக் கைது செய்தனர். விசாரணைக்காக மக்கள் மன்றத்தில் கொண்டுவந்து நிறுத்தினர்.
அப்பொழுது ஏதென்ஸில் குடியரசு என்னும் பெயரில் அநாகரிக ஆட்சிபுரிந்தவர்களின் நீதி மன்றத்தில், நீதியை எதிப்பார்பது தவறு என்பதை சாக்ரடீஸ் நன்கு அறிவார்(இந்தியாவை போன்று).எனவே பொறுமை காட்டினார்.

விசாரணைக்குப் பிறகு வாக்கெடுப்பு நடந்தது. சாக்ரடீஸ் குற்றவாளியென 281 பேரும், அவர் குற்றமற்றவர் என 220 பேரும் வாக்களித்தனர்.61 வாக்கு வித்தியாசத்தில் சாக்ரடீஸ் குற்றவாளி என முடிவாயிற்று.

இறுதியாக, ஆட்சியாளர்கள்,சாக்ரடீஸ் இனிமேல் தம் பேச்சின் மூலம் மக்களைத் தூண்டாது இருப்பதாக ஒப்புக்கொண்டால் தண்டனையை மாற்றி அமைப்பதாக கூறினார்.ஆனால் சாக்ரடீஸ் ஏதென்ஸ் நகர மக்களுக்காகப்பேசிக்கொண்டேயிருப்பேன்.உண்மையைத்தேடி அலையும் என் மக்களுக்குச் சிந்திக்கச் சொல்லிக் கொடுப்பதற்காகவே நான் வாழ்கிறென் என உறுதியாகக் கூறினார்.

அதனால் சாக்ரடீஸுக்குத் தண்டனை உறுதியாயிற்று.முதலில் அவரை நாடு கடத்துவது என முடிவாகியது.பின்பு பெருந்தொகையை அபராதமாகச் செலுத்தினால் அவரை விடுதலை செய்துவிடுவதாகவும் கூறினர்.ஆனால் இவ்விரு தண்டனைகளையும் சாக்ரடீஸ் ஏற்க மறுத்து விட்டார்.

அதனால் ஆத்திரமுற்ற அரசு, சாக்ரடீஸின் போக்கு அரசாங்கத்தை அவமதிப்பதாக உள்ளது என்று கூறி அவறுக்கு மரண தண்டனை அளித்தது.
சாக்ரடீஸ் கொடிய விஷத்தை உண்டு இறக்க வேண்டும் என முடிவாகியது.ஷெமலாக் என்னும் கொடிய விஷம் கொடுக்கப்பட்டது.அது கேட்டு அவர் மனைவி அழுது புலம்பினார். அரசாங்கம் சுமர்த்திய குற்றங்களை ஏற்றுக்கொண்டு விடுதலை ஆகுமாறு மன்றாடினாள். சாக்ரடீஸின் நண்பர்களும் வஞ்சகர்களின் பிடியிலிருந்து சாக்ரடீஸை விடுவிக்க மறைமுகமாக முயற்சி செய்தனர்.ஆனால் சாக்ரடீஸ்,இறுதி வரை அவற்றை ஏற்க மறுத்துவிட்டார்.பின்பு விஷம் அருந்தி மரணம் அடைந்தார்

அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எதையும் சிந்திகாமல் அப்படியே ஏற்காதே, ஏன்,எதற்காக,எப்படி என்னும் வினாக்களை எழுப்பி உண்மையை உணர்ந்துக்கொள். உன்னையே நீ எண்ணிப்பார்.எனச்சிந்தனைக்கு வழிவகுத்த அறிஞன் சாக்ரடீஸூக்கு ஏதென்ஸ் அளித்த பரிசு...............
ஒருகோப்பை நஞ்சு!