Tuesday, September 20, 2011

எஸ்.ஆர்.எம் கொள்ளையடிக்கும் கதை

"நாடு நலம் பெற, கையூட்டுகளை களைய;
ஊழலை ஒழித்து, நாட்டில் முதலீட்டுகளை பெருக்க..."

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் நிறுவனர் திரு. பச்சைமுத்து தொடங்கிய இந்திய ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதி தான் நீங்கள் மேலே படித்தது. புதிய தலைமுறை,வார இதழ்,தொலைக்காட்சியும் இவருடையது தான்.





"தேசத்தின் திருப்புமுனை...மாற்றத்தின் ஏவுகணை" என்று தன்னை வர்ணித்துக் கொள்ளும் கட்சி நடத்தும் பல்கலைக்கழகத்தின் அழகென்ன? தேர்தல் அறிக்கையில் கண்ட கனவுகள், குறைந்தபட்சம் இவர்களின் பல்கலைக்கழகத்திலேனும் நிறைவேறியதா? பார்க்கலாம் வாருங்கள்.....

சமீப வருடங்களில் எஸ்.ஆர்.எம் தனது தரத்தை உயர்த்திக் கொண்டதில் அதில் படிக்க விரும்பும் மாணவர்கள் இடையே போட்டா போட்டி... யார் அதிக நன்கொடை (?) தருவதென்று ! விலைவாசியைப் போல் இந்த நன்கொடைகளும் கட்டுப்பாடுகளின்றி ஏறிக் கொண்டே போகிறது. இன்றைய சூழலில் அங்கு விற்கப்படும் சில பொறியியல் பிரிவுகளின் விலைப்பட்டியல் இதோ -

கம்யூட்டர் சயின்ஸ் - 2 முதல் 3 லட்சம்
தகவல் தொழில் நுட்பம் - 2 முதல் 3 லட்சம்
மெக்கானிக்கல் - 6 முதல் 7 லட்சம்
எலக்டிரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் - 6 முதல் 7 லட்சம்


மேற்சொன்ன அன்பளிப்பு (?) இங்கு பல வகைகளில் வசூலிக்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வரும் வரை, தனியார் கல்லூரிகளில் தம் பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்களும், மாணவர்களும் காத்திருப்பதில்லை. அதை எஸ்.ஆர்.எம் போன்ற கல்லூரிகளும் விரும்புவதில்லை. பரிட்சை முடிந்த கையுடன் கல்லூரி நிர்வாகிக்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் பேரம் தொடங்கிவிடுகிறது. பேரம் படிந்ததென்றால், ஒரு துண்டுச் சீட்டில் நீங்கள் விரும்பும் பாடப்பிரிவு எழுதித் தரப்படும். இதை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியான உடன், நீங்கள் தேர்ச்சி அடைந்திருந்தால் உங்கள் சேர்க்கை உறுதி செய்யப்படும். தேர்வு முடிவுகள் வெளியான உடன் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வழக்கம் போல் நீங்கள் தரும் கையூட்டைப் பொறுத்து விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். கையூட்டிற்கான வாய்வழி ஒப்பந்தம் சுமுகமாய் முடிந்ததென்றால், பல்கலைக்கழகத்தின் காண்டீன் மற்றும் கார் பார்க்கிங் இணைந்திருக்கும் பகுதிக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு மாருதி சுவிப்ட் (Switft) போன்ற ஏதாவது ஒரு காரில் (ஜன்னல்கள் முழுதாய் மறைக்கப்பட்ட என்று சொல்லத் தேவையில்லை) உங்களின் பணம் வசூலிக்கப்படும். இந்தக் காருக்குள் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தவறியும் உங்கள் பணம் கண்காணிப்புக் கேமராக்கள் நிறைந்த நிர்வாக வளாகத்தினுள் வசூலிக்கப்பட மாட்டாது. ஒருவேளை நாளை வருமான வரித்துறையினரின் சோதனை வந்துவிட்டால்...? இந்த ஆதாரங்களை காட்டி நாங்கள் பணமே வாங்கவில்லை என்று சத்தியம் செய்யலாம் இல்லையா?

இந்த பேரங்களை முடித்துத் தருவதெற்கென்றே பல இடைத்தரகர்கள் உண்டு. எஸ்.ஆர். எம் - ல் சேவை செய்யும் பணியாளர்களும் இதில் அடக்கம். இன்னும் சிலரோ குறிப்பிட்ட சில கல்லூரிகளுக்கென தனி ஏஜெண்டுகளாக இருப்பர். அந்தந்த கல்லூரிகளில் மொத்தமாய் இவர்கள் சில சீட்டுகளை குத்தகை எடுத்திருப்பர். அந்த சீட்டுகளுக்கு அவர்கள் சொல்வது தான் விலை. ரூ. 25,000 முதல் கிடைக்கும் கமிஷனுக்காக அங்கு படிக்கும் சில மாணவர்களே இடைத்தரகர்களாய் மாறுவது தான் கொடுமையின் உச்சம்.

பொறியியல் படிப்பிற்கு ஆண்டிற்கு ரூ.2 லட்சம் கட்டணமாய் வசூலிக்கும் பணத்திற்கு ரசீது வழங்கும் எஸ்.ஆர்.எம். இந்த வசூல் வேட்டையை மட்டும் மறந்தும் கணக்கில் காட்டுவதே இல்லை. ஏன்? கொள்ளையடித்த பணத்திற்கு வரி கட்ட வேண்டுமென்பதலா? அல்லது நீங்கள் லஞ்சம் தர வேண்டும் என்பதலா?

கொள்ளைப்புரத்தில் மாணவர்களிடம் வசூலிக்கும் பணம் கையூட்டு அல்லாமல் வேறென்ன? ரகசியமாய் பண வேட்டை நடத்தும் உங்களுக்கு "நாடு நலம் பெற, கையூட்டுகளை களைய..." என்று தேர்தல் அறிக்கையில் சொல்ல என்ன அருகதை இருக்கிறது? நீங்கள் கொள்ளையடித்த பணத்தை அரசியல்வாதிகள் பங்கு போடக் கூடாதென்று தானே நீங்கள் அரசியல் கட்சியே ஆரம்பித்தீர்கள். இந்த வேஷம் எதற்காக? உங்கள் அரசியல் பாதுகாப்பிற்காக மக்களை ஏன் முட்டாளாக்க நினைக்கிறீர்கள்?

கல்வியை யாரும் சேவையாய் செய்ய வேண்டாம். பலர் மாற்றியபடி கல்வி வணிக மயமாகவே இருக்கட்டும். மேலை நாடுகளில் கல்வி பல பல்கலைக்கழங்களில் வணிக மயமாக்கப்பட்டாலும் அவை முறை தவறி செயல்பட்டதில்லை. அவர்கள் அதிக கட்டணம் வசூலித்தாலும், லஞ்சமாய் நன்கொடைகள் கேட்பதில்லை. படிக்கும் போதே மாணவர்களுக்கு கல்லூரிகளில் பகுதி நேர வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். இது நம் நாட்டிலும் வந்தால் மாணவர்கள் இடைத்தரகர்களாகும் கேவலமும், நெறி தவறும் அவலும் தடுக்கப்படலாம்.

எந்தக் கல்லூரி பணம் வாங்கவில்லை என்ற வாதம் ஏற்புடையதல்ல....எல்லா கல்லூரியும் வாங்குகிறதென்றால் எல்லோர் மீதும் நடவடிக்கைத் தேவை. இதற்கு சாட்சியங்கள் வேண்டும் என்றால் மாணவ சமுதாயமே நிற்கிறது மௌன சாட்சியாய்.

அதிகாரபூர்வமாய் நாம் புகார் தர வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்க வேண்டாம். முந்தைய ஆட்சியில் கொள்ளையடித்தவர்களை, கொட்டமடித்தவர்களை புகார்கள் ஏதுமின்றி அரசே முன்வந்து நடவடிக்கை எடுப்பது போல், கல்வித்துறையிலும் நடக்க வேண்டும். ஊருக்கே தெரிந்த உண்மை அரசிற்கு தெரியாதா என்ன? மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பாரா?

-- அருண் சிதம்பரம்

நன்றி: http://www.sivajitv.com/srm-university-corrupt-donation-story.html

Friday, September 16, 2011

சாதி பிளவுகள் உள்ள இந்தியாவில் உழைக்கும் மக்களின் வர்க்க போராட்டம் சாத்தியமா?


இந்தியாவில் வருணாசிரம பார்ப்பனிய இந்து மதவெறியும் அதன் அடிப்படையில் சாதிய ஆதிக்கமும் நிலவுவதையே சட்டபூர்வ போலி கம்யூனிஸ்டுகள் மறுத்து வருகிறார்கள். இந்துமத வெறியையும், மேல்சாதி ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடுவதற்குப் பதில் சாதி, மத ஒருமைப்பாடு மற்றும் மதச் சார்பின்மை என்ற சமரசவாதங்களை வைக்கின்றனர். இதற்குக் காரணம் அக்கட்சிகளின் தலைமையே இந்து மதவெறி மற்றும் மேல்சாதி ஆதிக்க நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அதேசமயம் சாதி இனவாதக் குழுக்களும் பிரமுகர்களும் வேறொரு தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். இந்தியாவிலுள்ள வருணசிரம பார்ப்பனிய இந்துமதம் மற்றும் சாதிய அமைப்பு மார்க்சிய லெனினிய வர்க்கக் கண்ணோட்டத்துக்கு விதிவிலக்கானது; இந்தியாவில் மட்டுமே தனிச்சிறப்பாக நிலவக்கூடியது என்கிறார்கள். இதுவும் ஏற்கக் கூடியதல்ல. முதலாளித்துவத்துக்கு முந்திய சமூக அமைப்புகள் உற்பத்தி முறைகளை ஆய்வு செய்தபோது அடிமைச் சமுதாயத்துக்கு ரோமானியப் பழம்பண்டு சமூகத்தையும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்துக்கு ஜெர்மானிய நிலவுடைமை சமூகத்தையும் வரைவிலக்கணங்களாக மார்க்சு எடுத்துக் கொண்டு பகுப்பாய்வு செய்தார். அவற்றிலிருந்து முதலாளித்துவத்துக்கு முந்திய சமூக அமைப்புகள் உற்பத்தி முறைகளின் பொது விதிகளைத் தொகுத்து தனது வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை வரையறுத்தார். இந்தப் பொதுவிதிகள் உலகிலிருந்த எல்லா சமூக அமைப்புகளுக்கும் பொருத்தமாகவே உள்ளன; அதேசமயம் அப்பொது விதிகள் ஒவ்வொரு சமூக அமைப்பின் தனிச்சிறப்பான கூடுதலான இயல்புகளை மறுப்பவையோ எதிரானவையோ அல்ல.

மார்க்சிய வர்க்கக் கண்ணோட்டத்தை அதன் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தைப் பிரயோகிக்கும் போது ஒவ்வொரு நாட்டுப் புரட்சியாளர்களும் அதன் பொது விதிகளையும், அந்நாட்டின் தனிச்சிறப்பான அம்சங்களையும் சேர்த்தே பார்க்க வேண்டும் என்று தான் மார்க்சு முதல் மாவோவரை வலியுறுத்தினார்கள். ஆனால் இங்குள்ள சட்டபூர்வப் போலி கம்யூனிஸ்டுகளும் சரி, சாதிஇனவாதக் குழுக்களும், பிரமுகர்களும் சரி பொதுவிதிகள் அல்லது தனிச்சிறப்பான அம்சங்கள் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டுமே பார்க்கிறார்கள். மற்றதை மறுக்கிறார்கள்.

வருணாசிரம பார்ப்பனிய இந்து வெறியும் அதன் அடிப்படையிலான சாதிய அமைப்பும் நமது நாட்டின் தனிச்சிறப்பான அம்சங்கள்; அவற்றை எதிர்த்து ஒழித்துக் கட்ட வேண்டும். இதை ஏற்றுக் கொள்பவர்கள் மத்தியிலேயே மூன்று தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக, சாதி இனவாதக் குழுக்களும் பிரமுகர்களும், நமது நாட்டில் வர்க்கங்களே சாதி வடிவங்களில் உள்ளன; எனவே சாதி ரீதியிலான புரட்சிதான் சரியான தீர்வாகும் என்கிறார்கள். குறிப்பாக, நமது நாட்டைப் பொருத்தவரை தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள்தான் பாட்டாளி வர்க்கமாக உள்ளனர்; இவர்களின் சர்வாதிகாரத்தை நிறுவுவதே புரட்சியின் கடமையாகும்; இன்னும் பிற்பட்ட சில சாதிகளை நட்பு சக்திகளாகக் கருதி ஐக்கிய முன்னணி அமைத்து பார்ப்பன பனியா சாதிகளை எதிர்த்துப் புரட்சி நடத்த வேண்டும் என்கின்றனர். இவர்களிலே ஒரு பிரிவினர் ஆயுதப் போராட்டத்தின் மூலமும், இன்னொரு பிரிவினர் இட ஒதுக்கீட்டின் மூலமும் இந்தப் புரட்சியைச் சாதிக்க வேண்டும் என்கின்றனர்.

ஆனால், பார்ப்பனபனியா கும்பல் தவிர வேறுபிற மேல்சாதிகளிலும், குறிப்பாக பிற்பட்ட சாதிகளிலும் நிலப்பிரபுத்துவ தரகு அதிகார முதலாளி வர்க்கங்களின் பிரிவினர் உள்ளனர். இந்தச் சாதிகளிலும் உழைக்கும் வர்க்கப் புரட்சிப் பிரிவினர் உள்ளனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சாதிகளிலும் ஊசலாடும் இடைத்தர சமூகத்தட்டு மக்கள் பிரிவினர் உள்ளனர். எனவே, சாதிய ரீதியிலான புரட்சி வெறும் வாய்ச்சவடாகவே இருக்கிறது.

இரண்டாவதாக, வர்க்கப் போராட்டத்தையும் சாதியப் போராட்டத்தையும் இணைத்துப் புரட்சி செய்ய வேண்டும் என்று சில போலிப் புரட்சிக் குழுக்களும் சில மார்க்சிய லெனினியக் குழுக்களும் சில ஆண்டுகளாகவே கூறிவருகின்றன. ஆனால், இதையும் எந்த அடிப்படையில், எந்த முறையில் சாதிப்பது என்று அக்குழுக்கள் கூறவே கிடையாது. அவற்றிலே சில குழுக்கள்பிரமுகர்கள் 1987 ஆகஸ்டில் சென்னையில் கூடி "சாதியும் வர்க்கமும்'' பற்றி ஒரு ஆய்வரங்கம் நடத்தினார்கள். அதிலும் அதன்பிறகும் இந்த அறிஞர்கள் செய்துள்ள முடிவு எல்லாம் இந்தப் பிரச்சினை குறித்து மேலும், மேலும் மேலும் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்பதுதானே தவிர முடிவும் தீர்வும் எதுவுமில்லை.

இன்னும் சில குழுக்கள், குறிப்பாக பீகாரில் சாதி மற்றும் வர்க்கப் போராட்டங்களை இணைக்க முயன்றனர். சாதி ரீதியிலேயே சில அமைப்புகளைக் கட்டினர். ஆனால் அதன் தலைமை இயல்பாகவே சாதிவெறி பிடித்துப் போய் பிற சாதிகளின் நிலமற்ற, ஏழை விவசாயிகள் பெண்கள் குழந்தைகளையே வெட்டிக் கொல்லும் அளவுக்குச் சீரழிந்து போனது. அடுத்தடுத்த சாதிகள் அடுக்குமுறையில் சாதிய ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருப்பதால், இந்தக் கசப்பான முடிவு தவிர்க்க முடியாததானது.

மூன்றாவதாக, வர்க்கப் புரட்சியின் மூலம் வருணாசிரம பார்ப்பனிய இந்துமத வெறியையும் அதன் அடிப்படையிலான சாதிய அமைப்பையும் தகர்த்திட வேண்டும் என்கிற சில மார்க்சிய லெனினியக் குழுக்களின் நிலைப்பாடும் முயற்சியும். இதுவே சரியானதெனக் கருதுகிறோம். ஆனால் " பொதுவான போராட்டங்களில் பங்கு பெற்றால் சாதிய உணர்வு மறைந்துவிடும்' என்று சாதிய ஒடுக்குமுறைகளையும், இந்துமத வெறியையும் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. ஒவ்வொரு விவகாரத்திலும் தனிச்சிறப்பான முக்கியத்துவம் அளித்து அவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும். வர்க்கரீதியாக அணிதிரட்டுவதில் கூட உறுதியாக இருக்கும்போது கிட்டத்தட்ட முழுக்கவும் உழைக்கும் மக்களாக உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சாதியினரும், பிற்பட்ட சாதிகளிடையே பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களுமே புரட்சியின் தலைமை மற்றும் பிரதான சக்திகளாக இருக்க முடியும். இந்த முறையிலே வருணாசிரம பார்ப்பனிய இந்துவெறிக்கும் சாதிய அமைப்புக்கும் எதிரான சக்திகளை ஒன்றுபடுத்தி அவ்றைத் தகர்க்க முடியும். இதற்கு முதற்பணியாக முக்கியப் பணியாகச் செய்ய வேண்டியது, வர்க்க ரீதியில் திரட்டப்படும் அமைப்புகளுக்குள் சாதி ஆதிக்க வெளிப்பாடுகள், சாதிப் பாகுபாடுகள் அனைத்துக்கும் எதிராக இடையறாத போராட்டம் நடத்த வேண்டும். அப்போதுதான் அவை புரட்சிகர அமைப்புக்களாக இருக்கவும் ஒடுக்கப்படும் மக்களின் நம்பிக்கையைப் பெறவும், ஒடுக்கும் சாதி ஆதிக்கத்தை வீழ்த்தவும் முடியும்.

Thursday, September 15, 2011

தொல்.திருமாவளவன்: ஒரு தலித் என்பதாலா?


"நான் ஒரு சாமானியன் என்பதால்தான், என் மீது இப்படிப் பழிபோடுகிறார்கள். இதையே மேட்டுக்குடியினர் செய்யும்போது என்ன செய்தார்கள்? மேட்டுக்குடிக்கு ஒரு நீதி, சாமானியனுக்கு ஒரு நீதியா?'' இப்படி தி.மு.க. தலைவர் கருணாநிதி வசனம் பேசுவதைத் தமிழக மக்கள் பலமுறை கேட்டிருக்கிறார்கள்.


""நான் ஒரு பெண் என்பதாலேயே என்மீது வீண் பழியும் பொய்யான குற்றச்சாட்டுக்களும் சுமத்தி, அரசியலில் இருந்தே என்னை ஒழித்துக் கட்டுவதற்கு தீய சக்திகள் சதி செய்கின்றன'' இப்படி அ.தி.மு.க.வின் ஏகபோகத் தலைவி ஜெயலலிதா ஒப்பாரி வைப்பதையும் தமிழக மக்கள் பலமுறை பார்த்திருக்கிறார்கள்.

தங்கள் நிலையை நியாயப்படுத்த முடியாதபோது, வெறுமனே அனுதாபம் தேடிக் கொள்வதற்காக இப்படிப் பேசி, தங்கள் பிறப்பு என்னும் கேடயத்தைக் கையிலெடுத்துக் கொண்டு நழுவிக் கொள்வது இந்த அரசியல் தலைவர்களின் வழக்கமான பாணி.

இதே பாணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவனும் "அரசியல் பண்ணி'க் கொண்டிருக்கிறார். அவரது தவறுகளை, குறிப்பாக அவருடைய அரசியல் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளையும், சந்தர்ப்பவாத சாதியக் கூட்டுக்களையும் கேள்விக்குள்ளாக்கினாலே, அவற்றுக்குப் பதில் கூறுவதற்குப் பதிலாக, தான் ஒரு தலித் என்பதாலேயே இவ்வாறு குறை கூறப்படுவதாகச் சித்தரிக்கிறார்.



இவ்வாறு தனது பிறப்பை முன்னிறுத்தித் தன் நிலையை நியாயப்படுத்தும் அவரது முயற்சி, உண்மையில் அவரது நிலைக்கு வலுச் சேர்ப்பதில்லை; மாறாக, அவரது அரசியல், சமூகக் கண்ணோட்டத்தில் உள்ள பலவீனங்களைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஆதிக்க சாதிவெறியர்களும், தற்போது தொல்.திருமா கூட்டணி வைத்துக் கொண்டுள்ள சாதி அமைப்புகளைச் சேர்ந்தவர்களும்தாம் அவர் ஒரு தலித் என்பதை முன்னிறுத்திப் பேசி வந்திருக்கின்றனர். அவர்கள்தாம் தம் இயல்பிலேயும், தமது சாதியினைத் திரட்டிக் கொள்ளவும் சாதிய ஓட்டு வங்கியை உருவாக்கித் தக்க வைத்துக் கொள்ளவும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வெறுப்பை உமிழ்பவர்களாகவும் உள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருமே ஏறக்குறைய உழைக்கும் மக்களாக உள்ள நிலையில், உழைக்கும் மக்களை அணிதிரட்டி அரசியல்சமூக மாற்றங்கள் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புரட்சிகர இயக்கங்கள் மட்டுமல்ல் தனியொரு சாதிய ஓட்டுவங்கியை நம்பி அரசியல் நடத்தாத ஓட்டுக் கட்சிகள் கூட யாரையும் சாதிய அடையாளத்தை முன்னிறுத்திக் குறைகூறுவதில்லை.

ஆனால், தொல்.திருமாவளவனோ, தன் நிலையை நியாயப்படுத்த முடியாமல், தனது சந்தர்ப்பவாத அரசியல் தவறுகளை மூடிமறைக்கவும் மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களை தனக்கு விசுவாசமான ஓட்டு வங்கியாக்கி வைத்துக் கொண்டு, பிற கட்சிகளிடம் பேரம் பேசுவதற்கும்கூடத் தனது சாதி அடையாளத்தை எப்போதும் முன்னிறுத்திக் கொள்கிறார்.

இந்த நோக்கத்துடனேயே, இன்னொரு திரித்துக் கூறும் வேலையையும் தொல்.திருமா செய்கிறார். அதாவது, தொல்.திருமாவளவன் மற்றும் அவரது அமைப்பான விடுதலைச் சிறுத்தைகள் மீதான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் எல்லாமே தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவர் மீதான தாக்குதலாகத் திரித்துச் சொல்லி, தனக்கு ஒரு பாதுகாப்புக் கவசத்தை தேடிக் கொள்ள எத்தணிக்கிறார். இன்னொருபுறம், இப்படிச் சொல்வதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்குமான ஏகபோகப் பிரதிநிதி தானே என்று உரிமை பாராட்டிக் கொள்கிறார். சமீபகாலமாக, தமிழர் தலைவராகப் பிரகடனப்படுத்திக் கொண்ட இவர், ஒட்டு மொத்தத் தமிழர்களின் பிரதிநிதியாகவும் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார்.

பல இலட்சம் உறுப்பினர்கள் தம் பின்னால் இருப்பதாக பல ஓட்டுக் கட்சிகளும், நடிகர்களின் ரசிகர் மன்றங்களும் கணக்குக் காட்டுவதைப் போன்றதுதான் திருமாவளவனின் செய்கையாகும்; சாதி சங்கங்கள்கூட இப்படித்தான், இத்தனை கோடிப்பேர் தம் சாதியினர் என்று உரிமைப் பாராட்டிக் கொள்கிறார்கள். ஏதோ அந்தச் சாதிக்காரர்கள் எல்லாம் அந்த சாதி சங்கங்களின் பின்னால் அணிவகுத்து ஆதரவு தெரிவிப்பது போல நாடகமாடுகிறார்கள்.

தொல்.திருமாவும் அவரது அமைப்பும் தாழ்த்தப்பட்ட சாதிகளிலேயே ஒரு உட்பிரிவு மற்றும் அந்த உட்பிரிவலும் ஒரு பகுதி ஆதரவை மட்டுமே கொண்டிருக்கிறார்கள். அவர்களும் இவர்களின் எல்லா நடவடிக்கைகளையும் ஆதரிக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. அந்த உட்சாதிப் பிரிவுக்குள்ளும் செ.கு.தமிழரசன், சக்திதாசன், வை.பாலசுந்தரம், லெமூரியன், பாக்கியராஜ், கிருஷ்ணப்பறையனார், சந்திரசேகரன் இன்னும் பல பத்து தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர்கள் என்றும் உள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் ஏகபோகத் தலைவர் எனத் தன்னை தொல்.திருமா வேண்டுமானால் கருதிக் கொள்ளலாம். ஆனால், விடுதலைச் சிறுத்தைகளைப் போலவே, தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே உள்ள மேற்கண்டவாறான அமைப்புகள் மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்கள், மற்ற பிரிவு மக்களோடு பங்கேற்கும் அமைப்புகளும் உள்ளன. இவ்வா றான அமைப்புகளில் உள்ள ""தாழ்த்தப்பட்ட சாதி உறுப்பினர்கள், பிற சாதியினரின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கின்றனர்'' என்று தொல்.திருமா கொச்சைப்படுத்துகிறார். அவர்கள் சுயசிந்தனை இல்லாதவர்கள் என்பதைப் போலவும், சுயநலனுக்காகக் கட்டுப்பட்டுக் கிடப்பதாகவும் கூறுவது அவர்களைக் கொச்சைப்படுத்துவதை தவிர வேறென்ன?

முதலாளித்துவ ஓட்டுக் கட்சிகளும், செய்தி ஊடகமும் யாரை எளிதில் விலைபேசி வாங்க முடியும் என்று கருதுகிறார்களோ, அந்த அடிப்படையில் தொல்.திருமாவை தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக முன்னிறுத்தித் தள்ளுகின்றன. தேவையான போது பயன்படுத்திக் கொண்டு வீசியெறிந்து விடுகின்றன. அவை முன்னிறுத்தித் தள்ளும்போது ""புகழ் போதை''யில் மயங்கி, ""மூப்பனார் ஒரு புரட்சித்தலைவர்'', ""ஜக்கி வாசுதேவ் சாமியார் மார்க்சைப் போன்றவர்'' என்றெல்லாம் உளருவதும், ஒதுக்கித் தள்ளி விடும்போது தாழ்த்தப்பட்ட மக்களை மதிக்காது, சாதி ஆதிக்க உணர்வோடு நடந்து கொண்டார்கள் என்று புலம்புவதுமாக இருக்கிறார், தொல்.திருமா.

இப்படித்தான் 2003 நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்த்துக் கொள்ள கருணாநிதி மறுத்தபோது, ஒரு சுற்று புலம்பித் தீர்த்தார். சாதிக் கட்சியான இராமதாசின் பா.ம.க.வை மட்டும் சேர்த்துக் கொண்டார்களே என்று அரற்றினார். ஆனால், அதே இராமதாசுடனும் முக்குலத்தோர் சாதி அமைப்புத் தலைவர் சேதுராமனுடனும் பின்னர் கை கோர்த்துக் கொண்டார்.

தொல்.திருமாவளவன் மற்றும் அவரது அமைப்பின் மீது ம.க.இ.க. மற்றும் பிற புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகள் வைக்கும் விமர்சனங்கள் எல்லாமே அரசியல் ரீதியானவைதாம். ஆனால், அவற்றுக்குப் பதில் சொல்ல முடியாத தொல்.திருமா தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றித் தரக் குறைவாக எழுதிவிட்டதாகவும், அவர் தலித் என்பதால்தான் அப்படிச் செய்வதாகவும், ஒட்டு மொத்த தலித் மக்களையும் அப்படிச் செய்து விட்டதாகவும் பிரச்சாரம் செய்தார்.

தேர்தல்களில் பங்கேற்பவர்களைப் பற்றி எவ்வளவு கடுமையாகச் சாடி வந்த தொல்.திருமா, தானே அந்தச் சாக்கடையில் வீழ்ந்துவிட்டபோது அவர் சொன்ன வாசகத்தை அவருக்கே பொருத்தி எழுதினோம். தன்னார்வக் குழுக்களுடன் அவருக்குள்ள உறவைப் பற்றி எழுதினோம். முன்பு கருணாநிதி, ஜெயலலிதா, மூப்பனாருடன், தற்போது இராமதாசு, சேதுராமனுடன் கை கோர்த்துக் கொண்டபோது அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை விமர்சித்தோம். பார்ப்பனப் பத்திரிகைகளுடன் உறவு வைத்துக் கொண்டு, பார்ப்பன எதிர்ப்பாளராக நாடகமாடுவதை விமர்சித்தோம். ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாதந்தாங்கி ஜார்ஜ் பெர்ணான்டசை வைத்துக் கொண்டு இந்துக் கலாச்சார எதிர்ப்பு மாநாடு நடத்துவதை விமர்சித்தோம்.

சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரிகள் சிக்கிக் கொண்டபோது, தொல்.திருமாவும் அவரது அமைப்பினரும் அடக்கி வாசித்தார்கள். சங்கராச்சாரியை அவர் சந்தித்தாக புகார் எழுந்தபோது, சங்கராச்சாரி சந்திக்கக் கூடாதவர் அல்ல என்று மறைமுக ஆதரவு தெரிவித்தார். சிதம்பரம் கோவிலுக்குப் போய் பரிவட்டம் கட்டிக் கொண்டதைப் பெருமைக்குரியதென்று பீற்றினார். அவ்வப்பொழுது பார்ப்பன பாசிச ஜெயலலிதாவைப் பாராட்டி நல்லுறவை வளர்த்தார். இப்படிப்பட்ட செய்கைகளை விமர்சித்தோம்.

இந்த விமர்சனங்கள் எதுவும் தொல். திருமா ஒரு தலித் என்பதால் செய்யப்பட்டவை அல்ல. தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் எதிரானவையும் அல்ல. இருந்தாலும் அப்படி இருப்பதாக திருமாவும் அவரது அமைப்பும் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். என்ன எழுதினார்கள், என்ன பேசினார்கள் என்ற விவரத்துக்குள் போகாத மூளை சோம்பேறிகளும், அவர்களின் விசுவாசிகளும், ""நம்ம ஆளுக்கு எதிராக ஏதோ எழுதிவிட்டார்கள், பேசிவிட்டார்கள்'' என்ற சொற்பேச்சைக் கேட்டுவிட்டுக் குதிக்கிறார்கள்.

நமது குற்றச்சாட்டுகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதில் கூறத் திராணியற்ற நிலையில் மேற்கண்டவாறு திசை திருப்புவதோடு, அவற்றுக்கு உள்நோக்கம் கற்பிக்கவும் செய்கிறார்கள். புரட்சி செய்து சாதியத்தை ஒழிப்பதாகக் கூறி தலித் இளைஞர்களை ஏய்த்து பாதுகாப்பும் உணவும் தேடிக் கொண்டிருந்த நக்சல்பாரிகள், இப்போது தொல்.திருமாவால் விழிப்புணர்வு பெற்ற தலித்துக்களால் விரட்டப்படுவதால் ஆத்திரமுற்றுத் தம்மைப் பற்றி கீழ்த்தரமாக(!) எழுதியும் பேசியும் வருவதாக உள்நோக்கம் கற்பிக்கிறார்கள்.

தம்மை விமர்சிப்பவர்கள் மீது உள்நோக்கம் கற்பிப்பதோடு, எதிர்த்தாக்குதல் நடத்தவும் செய்கிறார்கள். இதனால் நட்பு முரண்பாட்டைப் பகை முரண்பாடாக்கும் ஐந்தாம்படை வேலையும் செய்கிறார்கள். அம்பேத்கரைப் போலவே பெரியாரையும் மதித்து நடப்பதாகப் பேசிக் கொண்டே, தொல்.திருமா தனது சித்தாந்த குருவான (!) இரவிக்குமார் எழுதும் பெரியாரைக் கொச்சைப்படுத்தி, பார்ப்பனதலித் கூட்டணியை உருவாக்கும் வகையிலான கட்டுரைகளை திருமா பொறுப்பாசிரியராக உள்ள பத்திரிகையில் தொடர்ந்து வெளியிட்டார்.

பெரியாருக்கு எதிராக திருமாஇரவிக்குமார் இணை செய்துவந்த பிரச்சாரத்தைக் கண்டித்து பெரியாரியவாதிகளும், பற்றாளர்களும் நடத்திய அரங்கக் கூட்டத்தில் புகுந்து திருமா விசுவாசிகள் தாக்குதல் நடத்தினர். திருமாவைத் தரக்குறைவாகவும், தாழ்த்தப்பட்ட மக்களை நேரடியாகவும் தாக்கிய ஆதிக்க சாதித் தலைவர்களோடு கூட்டு வைத்துக் கொண்டுள்ள திருமாவும் அவரது விசுவாசிகளும், புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகளைப் பற்றித் தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசுவதோடு நேரடித் தாக்குதலும் நடத்த விழைகின்றனர். ""தலித் அமைப்பு'' என்று கூறிக் கொள்பவர்களிடம் பகை முரண்பாடு கொள்ளக்கூடாது என்று இவர்கள் அமைதி காப்பதைப் பலவீனமானதென்று கருதுகின்றனர்.

தொல்.திருமாவளவனும் அவரது அமைப்பும் தம்மிடம் உள்ள அரசியல், சித்தாந்தம் மற்றும் பண்பாட்டுத் துறையிலான ஓட்டாண்டித்தனத்தை மூடி மறைக்கவும், அதற்கு ஈடுகட்டவும்தான் மேற்கண்ட தகிடுதத்தங்களில் ஈடுபடுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைதான் தமது இலட்சிய நோக்கம் என்று அவர்கள் ஆரம்ப காலத்தில் கூறிக் கொண்டார்கள். அதற்கான அறிக்கை (நகல்) ஒன்றைப் பின்நவீனத்துவவாதிகளுடன் சேர்ந்து வெளியிட்டனர். அதையும் கிடப்பில் போட்டு விட்டனர்.

""அடங்க மறு! அத்துமீறு!'' என்று முழக்கமிட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் ""அடங்க மறுப்பதும் அத்துமீறுவதும்'' சரியானதுதான். ஆனால், அதுவே அவர்களின் சமூக விடுதலைக்கான ஒருங்கிணைந்த முழுமையான பார்வையோ, வழியோ கொண்டதில்லை. சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து முறியடிப்பதற்கான எந்தவித அரசியல் அமைப்புத் தயாரிப்புமின்றி அடங்க மறுத்துப் போராடிய தலித் இளைஞர்கள் ஆதிக்க சாதியினரின் தாக்குதல்கள், அரசுபோலீசின் ஒடுக்குமுறை பொய்வழக்குகளை எதிர்கொண்டார்கள்.

அரசுபோலீசு ஒடுக்குமுறை பொய்வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்கும், அமைப்புப் பிரமுகர்கள் உள்ளூர் அளவில் ""மதிப்பு''ப் பெறவும் தேர்தல் அரசியலில் குதிப்பது என்று முடிவு செய்தார்கள். தேர்தல் அரசியலுக்கு வசதியாகவும் ஆதிக்க சாதிகளின் தாக்குதல்களில் இருந்து "தப்பிப்பதற்கும்' ""அடங்க மறு! அத்துமீறு!'' என்ற முழக்கத்தைக் கைவிட்டு ""இனி சாதிச் சண்டைகள் கிடையாது!'' என்று அறிவித்து, சாதி அமைப்புகளின் தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்தார்கள்.

இந்த முடிவுகளும் நடைமுறையும் ஒடுக்கும் சாதிகளுக்கும் ஒடுக்கப்படும் சாதிக்கும் இடையே ""சாதி அமைதியை'' வேண்டுமானால் ஏற்படுத்தலாம். தொல்.திருமாவைப் போன்று அவரது அமைப்புப் பிரமுகர்கள் சிலரைப் பதவிக்குக் கொண்டு வரலாம். ஆனால், இந்தப் பாதை தலித் மக்கள் மீதான தாக்குதல் ஒடுக்குமுறைகளை தடுத்து நிறுத்தி விடுமா? இல்லை, அவர்களின் சமூக விடுதலைக்குத்தான் வழிவகுக்குமா? மாயாவதி, ராம்விலாஸ் பாஸ்வான், அதாவலே போன்றவர்கள் என்ன சாதித்தார்கள்?

""வேறு கட்சிகளில் உள்ள தலித்துகள் அந்தக் கட்சிக்குத்தான் விசுவாசமாக இருந்து, தலைவர்கள் சொன்னபடி ஆடி, அடிமைகளாகவே உள்ளனர். தங்களுடையதைப் போன்ற தலித் கட்சிகளில் இருந்தால்தான் தம் மக்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள்'' என்று சொல்கிறார்கள் திருமாவும் அவரது அமைப்பினரும். ஆனால் மாயாவதி, ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்தார்கள்? அமைச்சர் பதவிக்கு ஆசை காட்டியவுடன் பார்ப்பன பாசிச பா.ஜ.க.வுக்கு சோரம் போய்விடவில்லையா? துரோகிகளாவும், பிழைப்புவாதிகளாகவும் சீரழிந்து போய்விடவில்லையா?

அதோடு, தலித்துக்களே முதலமைச்சர்களானாலும், இந்த அரசமைப்பில் தலித் விடுதலைக்காக இல்லாவிட்டாலும், சாதி மற்றும் அரசுபோலீசு ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றும் செய்துவிட முடியாது என்பதற்கு மாயாவதியே சான்றாக இருந்திருக்கிறார்.

தற்போது நடக்கும் கூட்டணி அரசியல் விளையாட்டில் ""ஒரு நல்வினை விபத்து'' நடந்து, தொல்.திருமா ஏதாவது பதவிக்கு வந்துவிட்டாலும் வியப்பில்லை. இப்படிப்பட்ட ""விபத்து''க்களால் தலித் மக்களின் வாழ்நிலையில் எந்த மாற்றமும் வந்துவிடாது. ஆனாலும், அதைக் குறிவைத்துத்தான் அரசியல் சூதாட்டத்தில் அவர் காய்களை நகர்த்துகிறார். அம்பேத்கர், பெரியார், இரட்டைமலை சீனிவாசன் போன்றவர்களை தமது வழிகாட்டிகள் என்று தொல்.திருமா கூறிக் கொண்டாலும் மாயாவதி, ராம்விலாஸ் பாஸ்வான், அதாவலே காட்டிய பாதையிலேயே நடைபோடுகிறார். அதையும் விரைவில் எட்டிவிடும் நோக்கத்தோடு, திராவிட இயக்கத்தவர் கடைப்பிடித்த வெறுக்கத்தக்க, கேலிக் கூத்தான தனிநபர் கவர்ச்சி, தனிநபர் துதி தனிநபர் வழிநாடு மூலம் சாதித்துவிட எத்தணிக்கிறார்.

பேராசிரியர் கல்விமணி புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகளின் சுவரெழுத்துப் பிரச்சாரத்தைக் கேலி செய்ததை, அப்படியே வாந்தி எடுத்தனர் திருமாவும் அவரது விசுவாசிகளும். ஆனால், தமிழகத்தின் வடமாவட்டங்கள், குறிப்பாகச் சென்னை மாநகரச் சுவர்களில் எல்லாம் திருமா, திருமா என்ற ஆளுயரச் சுவர் விளம்பரங்கள்; அவற்றில் அவரது, அவருடைய அமைப்புக் கருத்துக்கள் எதுவும் கிடையாது. ராமா, ராமா, கோவிந்தா, கோவிந்தா என்று கூச்சல் போட்டாலே புண்ணியம் கிட்டும் என்பதைப் போல, சினிமா நாயகர்களின் ""கவர்ச்சி''யை விஞ்சும் பலவித போஸ்களில் திருமாவின் சுவரொட்டிகள், தட்டிகள். அவரே நினைவில் வைத்துக் கொள்ள முடியாத எண்ணிக்கையில் பட்டங்கள், பாராட்டுப் புகழ் பாடுவதற்கென்றே பலவகை கூட்டங்கள் நிகழ்ச்சிகள். வீரவாள், மலர்கிரீடம், கார்கள் பவனிவர, பூனைப் படையைப் போல கருஞ்சிறுத்தைகள் புடைசூழ பயணங்கள். அவரது பத்திரிகையைப் புரட்டினால் பக்கத்துக்குப் பக்கம் திருமாவின் பலவகை நிழற்படங்கள். தன்னைத் தானே தலித் மற்றும் தமிழர் தலைவராக அறிவிக்கும் அவரே எழுதிய தலையங்கங்கள், சுயபுராணங்கள்.

திராவிட இயக்கத் தலைவர்களை விஞ்சும் இந்தச் சுயவிளம்பரங்கள், சுயதம்பட்டங்கள், அவர்களின் அமைப்புகளில் உள்ள காலில் விழுந்து கும்பிடும் வழக்கத்துக்கு முந்திய நிலையில்தான் நிற்கிறது. விரைவில் அதுவும் நடக்கும் என்றே எதிர்பார்க்கலாம். மக்களிடம் சொல்வதற்கும், எழுதுவதற்கும் எந்த விசயமும் இல்லாதபோது, இத்தகைய ""கவர்ச்சி''ப் பிரச்சாரங்கள் தாம் செய்ய முடியும்.

ஓட்டுக் கட்சிகள் எல்லாம், தேர்தலுக்குத் தேர்தல் எவ்வளவோ வாக்குறுதிகளை வாரி வழங்குகிறார்கள். அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளைப் பற்றி எப்போதும் பேசுவதில்லை. தேர்தல் முடிந்தவுடன் தமது வாக்குறுதிகளைப் பற்றியும் மூச்சுவிடுவதில்லை. அப்படித்தான் தொல்.திருமாவும் அவரது அமைப்பும் சாதிய ஒழிப்பு, தலித் விடுதலை ஆகியவை தமது இலட்சியம் என்று முழங்குகிறார்கள். ஆனால், அதை நிறைவேற்றுவதற்கான வழிவகை என்ன, நடைமுறை என்ன என்று எதுவும் பேசுவதில்லை. இப்படிப்பட்ட கேள்விகள் எழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே பரபரப்பான அறிக்கைகள் பேட்டிகள், ஆர்ப்பாட்டங்கள் என்று திசைதிருப்புகிறார்கள்.

தான் தலித் மக்கள் அனைவரின் பிரதிநிதி, தமிழ் மக்கள் அனைவரின் தலைவர் என்று தொல். திருமா உரிமை பாராட்டிக் கொள்கிறார். வெறுமனே இப்படிச் சொல்வதாலும், தனிநபர் கவர்ச்சி, துதியாலுமே அவ்வாறு ஏற்றுக் கொள்வதற்கு தலித் மக்களும், தமிழ் மக்களும் ஏமாளிகள் அல்ல. தலித்துகளின் பிரதிநிதி, தமிழ் மக்களின் தலைவர் என்ற முறையில் அவர் என்ன செய்தார் என்பதன் அடிப்படையிலேயே ஏற்பார்கள்.

இந்த உண்மைகளைத்தான் நாம் எடுத்துச் சொல்கிறோம். நாம் எழுப்பும் கேள்விகள், முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் கூறுவதற்கு பதிலாக, தொல்.திருமாவளவன் ஒரு தலித் என்பதாலும், ஒரு தலித் தமிழ் மக்களின் தலைவராக உருவாவதை பொறுக்க முடியாத பொறாமையாலும்தான் தம்மீது ""குறை கூறுகிறார்கள்'' என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். அவரது விசுவாசிகளும், துதிபாடிகளும் மட்டுமே இத்தகைய பிரச்சாரத்தை ஏற்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களும், தமிழ் மக்களும் ஏற்பதில்லை என்பதுதான் உண்மை.

ஆர்.கே.

 

Monday, March 21, 2011

அரசு - நூல் அறிமுகம்


அரசு என்ற இந்த நூல் யா.மி.ஸ்வேர்திலோவ் பல்கலைக்கழகத்தில் கி.பி.1919 
சூன் 11 – இல் வி.இ.லெனின் ஆற்றிய விரியுரை ஆகும்.

இன்றைய சூழலில் அரசுக்களைப்பற்றிய பேச்சுக்கள் மக்கள் மனதில் ஒருவிவாதத்தையே நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது. நமது இந்தியாவில் இன்று எங்கும் ஊழல் எதிலும் ஊழல். அது அரசு அரசாங்கம்,அரசின் கட்டுப்பாட்டில் தனியாக இயங்கும் நிறுவனம் என்று எல்லாவிடத்திலும் தலைவிரித்து ஆடுகிறது.
 அரசின் கொள்கையே தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம் என்றும்,வாணிபச்சுதந்திரமே மனித சுதந்திரம் என்று சொல்லும் நிலைக்கு தாழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவில் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் பெரும்பான்மையான மக்கள் அல்லல் பட்டுக்கொண்டு, தினம்தினம் மரணத்துடன் மோதி இறந்துக்கொண்டு இருக்கிறார்கள்.அன்றைய 1947ஆம் ஆண்டுடில் இருந்து இன்று 2011 வரை இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.மற்றொருபக்கம் மிக சிறுபான்மையாக இருக்கும் பணக்காரர்களின் சொத்தும்,செல்வமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு கழிவு வேலை செய்வதற்கே ஒரு குறிப்பிட்ட உயர் மத்தியதரவர்க்கம் செயல்படுகிறது. இவர்களின் வளர்ச்சியை வைத்தே இந்தியாவின் வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறது இந்திய அரசின் புள்ளிவிவரங்கள்.




        இந்நிலையில் அரசு என்பதனைப்பற்றியும்,அதன் முரண்பட்ட செயல்பாடுகளைப்பற்றி தெரிந்துக்கொள்வது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

        அரசு என்பது என்ன? வரலாற்றில் அரசு எங்கு தோன்றியது? அதன் செயல்கள் என்ன? இந்த அரசு இயந்திரத்தை இயக்குபவர்கள் யார்? அரசு என்பது எல்லா மக்களின் நலன்களை பிரதிபளிக்கக்கூடியதா? என்பவனைப்பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும்படியாக அரசு என்கின்ற இந்த சிறிய நூல் உதவுகிறது.

இந்த நூலில் இருந்து சில நல்ல வாக்கியங்களை இங்கு பதிக்கிறேன்.

“அரசு என்பது பற்றிய பிரச்சனை மிகமிக சிக்கலும் கடினமான ஒன்று; முதலாளித்துவ அறிஞர்கள்,எழுத்தாளர்கள்,தத்துவஞானிகளால் ஒரு வேளை மற்றப்பிரச்சனையையும் விட மிகுதியாகக்குழப்பி விடப்பட்ட ஒன்றாகும்”

“ஆளுவதை மட்டுமே தொழிலாகக்கொண்ட ஒரு தனிப்பிரிவினர் தோன்றும் பொழுது,பிறருடைய சித்தத்தைக்கட்டாயப்படுத்துவதற்கும்,கீழ்ப்படுத்துவதற்குமான தனி இயந்திரம் – சிறைசாலைகள் தனிப்பட்ட படைபிரிவுகள்,இராணுவம் முதலியவை அவர்களுக்குத்தேவைப்படும் பொழுது, அரசு என்பது தோன்றியது.”

“ஆதி சமுகம் அரசே இல்லாத சமுகம். ஏன்னென்றால் அங்கு வர்க்கங்கள் இல்லை.அதாவது சுரண்டுபவர்கள் இல்லை.”

“எல்லோருக்கும் ஜனநாயகம், எல்லோருக்கும் சுதந்திரம் என்பதே ஒரு பொய்.”

“நிலத்திலும் உற்பத்திச்சாதனத்திலும் தனிச்சொத்து நிலவும் ஒவ்வொர் அரசும், மூலதனம் ஆதிக்கம் செலுத்தும் ஒவ்வோர் அரசும், எவ்வளவுதான் ஜனநாயகத்தன்னை உடையதாக இருப்பினும், அது முதலாளித்துவ அரசேயாகும்.”

“மூலதனத்தின் பலம்தான் எல்லாம். பங்கு மார்க்கெட்டுதான் எல்லாம். நாடாளுமன்றமும்,தேர்தல்களும் வெறும் கண்துடைப்பு கைப்பாவையாகும்.”

இந்த சிறிய நூல் கிடைக்கும் இடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10,அவுலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை-600 002
போன்:044 - 2841 2367

Friday, February 4, 2011

அம்பேத்கர் திரைப்படம் ஒரு பார்வை

அம்பேத்கர் திரைப்படம்.இது வெளியாவதற்கே பல பிரச்சனைகள் ஏற்பட்டு,பல நல்ல உள்ளங்களினாலும், நீதிமன்றத்தின் தலையீட்டினாலும் வெளிவந்தது.சரி நாம் கண்டிப்பாக தியேட்டருக்குப்போய் பார்த்துவிடவேண்டும் என்று முடிவுசெய்து. நானும்,என் நண்பனும் ஞாயிறு நண்பகல் காட்சியாக உதயம் வளாகத்திற்கு சென்றேன்.டிக்கெட் எடுத்து உள்ளே சென்று உட்காந்தோம்.

தொடக்ககாட்சியே உள்ளத்தை தொடுவது மாதிரி இருந்தது."உலகத்திலேயே எந்த இனமும் அனுபவிக்காத ஒரு கொடுமையை இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள் என்கிற மக்கள் அனுபவிக்கிறார்கள் என்று தொடங்கியது படம்". அம்பேத்காரின் வாழ்க்கையினை நான் நூல்களின் மூலமாக படித்துள்ளேன்.அதை திரைப்படமாக எடுத்திருப்பது  திருப்தி அளிக்கிறது என்றே சொல்வேன்.அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும்,பெண்களுக்காகவும் தன் சுயநலத்தை துறந்து கொடுமைகளின் ஊடே தன் போராட்டத்தை நடத்தி இருக்கிறார் என்பதை என் கண்முன்ணே காட்டியது இந்த படம்.ஒருவன் எந்த பெரியப்படிப்பு படித்தாலும் இந்தியாவில் சாதி அடிப்படையில் தான் ஒரு மனிதனை பார்த்து இருக்கிறார்கள்(இன்றும் பல இடங்களில் அப்படிதாங்க இருக்குது) என்பது நமக்கு தெரிந்தாலும், படத்தில் பார்க்கும் போது இந்திய சமுகத்தை நினைத்தாலே அருவெறுப்பாக உள்ளது. அம்பேத்கர் காந்தியுடன் உரையாடும் உடையாடல்கள் காந்தியின் சந்தர்ப்பவாத மனநிலையை வெளிக்காட்டியுள்ளது.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தி என்பவர் துரோகத்தை தவிர வேறு எதையுமே செய்ததில்லை என்பதை சொல்கிறது இந்த திரைப்படம். காந்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவே பல வேளைகளில் செயல்பட்டிருப்பது பல நூல்களில் இருந்தாலும், திரைப்படத்தில் இருப்பது,கண்டிப்பாக தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே என்கருத்து.காங்கிரஸ் என்ற கட்சி என்பதே உயர்சாதி கட்சியின் பிரதிநிதியாகதான் செயல்ப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது.
பெரியார் திரைப்படத்தில் பெரியாரின் அரசியலை எடுத்துவிட்டு எடுத்து இருந்தார்கள்.ஆனால் இந்த திரைப்படம் அந்தப்படத்தை விட எவ்வளவோ மேல் என்று தான் சொல்லவேண்டும்.

வங்காளதேசத்தில் பிரம்படிக்கொடுத்து 14 வயது சிறுமி கொலை


வங்காள தேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமி சொசாமெட் ஹெனா.இவள் டாக்கா நகருக்கு வெளியே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தாள்.அவள் அந்த கிராமத்தை சேர்ந்த திருமணமான 40 வயது ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்த தாக கூறப்படுகிறது. இதை அறிந்த கிராமவாசிகள் மத தலைவர்களிடம் புகார் கூறினார்கள். மத தலைவர்களின் பஞ்சாயத்து கூடி இது பற்றி விசாரணை நடத்தியது.

முடிவில் அந்த சிறுமிக்கு சாகும் வரை 100 முறை சவுக்கடி கொடுக்க வேண்டும் என்றும், கள்ள உறவு வைத்து இருந்த 40 வயது ஆணுக்கு 100 பிரம்படி கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.



இதை தொடர்ந்து அந்த கிராமத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அந்த பெண்ணுக்கு பிரம்படி கொடுக்கப்பட்டது. 70முறை பிரம்படி கொடுக்கப்பட்ட போதே அந்த பெண் மயங்கி விழுந்து விட்டாள். அதன் பிறகு அவள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள்.அங்கு அவள் இறந்து விட்ட்தாக டாக்டர்கள் அறிவித்தனர்.
அவளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட ஆண் தண்டனை கொடுக்கும் முன்பே ஒடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து டாக்கா ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரனை நடத்தியது.அந்த சிறுமியை பாதுக்காக்க தவறியது ஏன் என்பதற்கான விளக்கத்தை 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது



                --- நன்றி தினத்தந்தி



இது தான் இஸ்லாமியர்களின் கோர்ட்டின் தீர்ப்பு.மனிதனை மனிதனாகவே கருதாத ஒரு காட்டுமிராண்டித்தனமான இந்த தீர்ப்புகள் தான் இவர்களின் அடிப்படை பாரம்பரியம்.ஒரு முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் வெறியை இன்னும் கோட்பாடுகளாகவும்,கொள்கையாகவும் வைத்து இருக்கிற மதம் தான் இஸ்லாம்.இதை செய்ய தான் ஜமாத்துக்கள் படுவேகமாக செயல்பட்டு வருகின்றன. இந்த பெண்னையே எடுத்துக்கொள்வோம்.14 வயது பெண்ணுக்கு செக்ஸைப்பற்றி என்ன தெரிந்திருக்கும் இருக்கும்.அந்த பெண் தானாகவே முன்வந்து தன்னைவிட வயதில் அதிகமாக இருக்கும் ஆண்களிடம் உறவுக்கொண்டு இருப்பாலா?அறிவியல் ஒரு பெண் உடல் உறவுக்கொள்ள உடல்ரிதியான தகுதி குறைந்தது  16 என்றும் என்றாலும் உடல் வளர்ச்சி,சிந்தனை வளர்ச்சி போன்றவைகளும் சேர்ந்துதான் இதை சொல்லமுடியும் என்று கூறுகிறது. ஜனநாயக நாடுகளில் 14 என்பது குழந்தைகளுடன் உறவு எனபது பாலியல் பலாத்காரம் என்றுதான் சட்டம் சொல்கிறது.ஆனால் இந்த காட்டுமிராண்டிகளின் கோட்பாட்டில் இது சரி,இது தான் நீதி  போல. 40 வயது ஆண்னும் 14வயது பெண்ணையும் சம்மாக பாவிக்கும் இந்த செயல்களை நீதி என்று ஏற்ப்பது சரியாகுமா? சிந்திப்பீர்.

Thursday, December 2, 2010

நாவல் அறிமுகம்: சோளகர் தொட்டி

சோளகர் தொட்டி என்கிற தலைப்புடைய இந்த நாவலை என் நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்து,இது ஒரு உண்மை கதை படித்துபார் என்றார்.
எனக்கு இந்த ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டு இருக்கிற நாவல்களை படிப்பதே பிடிக்காது. சரி நண்பர் கொடுத்துவிட்டாரே அதற்காவது தினமும் ஒரு இரண்டு பக்கங்களையாவது புரட்டி விடலாம் என்று படிக்க துவங்கினேன்.படிக்க படிக்க ஆர்வமாகவும்,கோபமும் கூடிக்கொண்டே போனது. நானும் அந்த காட்டுக்குள் ஒரு பார்வையாளனாக பயணம் செய்வதை போன்று உணர்ந்தேன். அந்த அளவிற்கு எதார்த்தத்தை பிரதிபளித்தது இந்த நாவல். சோளகர் தொட்டியை எழுதிய பால முருகன் மிகவும் எளிமையான வார்த்தைகளால் அழகு சேர்த்திருந்தார்.உண்மையான கவிதைகள்,கதைகள்,நாவல்கள்,வர்ணனைகள் யாவும் பெரும்பான்மையான மக்களுக்கு புரியும்படி, எளிமையாகஎழுதினால் தான் அதை படைத்த நோக்கமே பூர்த்தி அடையும்.அதை தான் பால முருகன் செய்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தின் எல்லையில் அழகான மலைகள் மற்றும் காடுகளின் பகுதியில் உள்ளது தொட்டி. இங்கு இயற்கையுடன் பிண்ணி பிணைந்து அமைதியாக வாழ்ந்துவரக்கூடிய “சோளக்கர்” என்ற இனத்தை சார்ந்த பழங்குடிமக்களைப்பற்றியது இந்த நாவல்.

அமைதியாக வாழும் மக்களின் வாழ்க்கையில் வீரப்பன் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் அவர்களை சின்னாபின்னமாக்கும் போலிஸ் பயங்கரவாதத்தைப்பற்றியது தான் இந்த கதை.


இந்த நாவல் இரண்டு பகுதிகளைக்கொண்டது.முதல் பகுதி அமைதியாக இயற்கையுடன் வாழ்ந்துக்கொண்டுருக்கும் அம்மக்களின் பழக்கவழக்கங்களும்,பண்பாடுகளும்,வாழ்க்கை முறைகளும் பற்றிப்படிக்கும் போது புராதான பொதுயுடைமை சமுகத்தின் மிச்சங்களாக தெரிகிறது. அரசு காடுகளில் வேட்டையாடுவது தடை செய்ததால்,காடே தன் வாழ்வு என்று வாழ்ந்த மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்,எப்படி பணக்கார மற்றும் அதிகார வர்க்கத்தால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை விளக்குகிறது இந்த முதல் பகுதி.

இதில் பேதன் மற்றும் ஜோகம்மாள் போன்றவர்கள் தங்கள் நிலத்தை அபகரிக்க நினைக்கும் துரையன் மற்றும் மணியகாரனிடம் பேசும் சொற்கள் அவர்கள் அந்த காட்டையும் மண்னையும் எப்படி நேசிக்கிறார்கள் என்பதை வெளிப்படித்தியுள்ளது.

இதில் விதவைகளைப்பற்றி சொல்ல வேண்டும்.நாகரிகம் அடைந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம். இன்னும் விதவைகளை ஒதிக்கிவைத்துதான் வாழ்ந்துவருகிறோம்.ஆனால் தொட்டியில் யார் வேட்டையாடி எதைக்கொண்டுவந்தாலும் முதல் பங்கு விதவைகளுக்குதான்.பிறகு தான் எல்லோரும் பிரித்துக்கொள்கிறார்கள்.ஒரு பெண் ஒரு ஆண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்,அவனை விட்டு விலகவும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது தொட்டியில். அந்த அளவிற்கு ஆணும்,பெண்ணும் ஜனநாயகத்துடன் வாழ்கிறார்கள்.

இரண்டாவது பகுதி வீரப்பனை பிடிக்க கர்நாடக,தமிழ்நாடு அதிரடிப்படைகளின் பயங்கரவாதச்செயல்களை பதிவு செய்கிறது இந்த நாவல்.

நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் இந்த சமகாலத்தில், ஒரு பகுதியில் சட்டம்,ஒழுங்கு,வனம் பாதுகாப்பு என்கிற பெயரில் அந்த மக்கள் மீது கற்பனை செய்ய முடியாத,மனித தன்மையே இல்லாத பயங்கரவாத செயலை செய்து இருக்கிறது போலிஸ்.விரப்பனுக்கு உதவிகள் இந்த பழங்குடிகள் மூலம் தான் கிடைக்கிறது என்கிற சந்தேகத்திற்காக,அந்த மக்களை மனரீதியாகவும்,உடல்ரீதியாகவும்,பயம்முறுத்துவதற்காக போலிஸ் மேற்கொள்ளும் நடைவடிக்கைகளும்,சித்திரவதைகளும்,படிப்பவர்களின் கண்களை குழமாக்கிவிடுகிறது. இந்த போலிஸ்காரர்களா? மக்களின் நண்பன் என்று நினைக்கும் போது கண்கள் சிவக்கிறது.குசு விட்டாலும் அதை பெரிதுபடுத்தும் ஊடகங்கள், ஓட்டுபொறிக்கி நாய்களும், வீரப்பனுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை,போலிஸ் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு கொடுக்கவில்லை.அவர்களுக்கு ஆதரவாக எதுவுமே செய்யவில்லை.விரப்பனை சுட்டுக்க்கொன்றதற்கு பெரிய விளையாட்டுதிடலில் பாராட்டுவிழாவெல்லாம் எடுத்தார்கள்.யார்யாரோ கலந்துக்கொண்டு ஜனநாயகத்தையும், போலிஸ்காரர்களின் தியாகத்தைப்பற்றியெல்லாம் சொன்னார்கள்.ஆனால் ஒருத்தர் கூட போலிஸ் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று பேசவில்லை. என்னசெய்வது அந்த பழங்குடிகள் மக்களாகவே தெரியவில்லைப்போல இந்த ஓநாய்களுக்கு. போலிஸ்காரர்களுக்கும்,அவர் மனைவி மக்களுக்கு எதாவது பாதகம் வந்தால் அது வன்முறை,தீய செயல் ,தீவிரவாதம் சுட்டே சாகடிக்கலாம்.ஆனால் பழங்குடிகள்,மலைவாழ்மக்கள்,தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் போலிஸ்காரர்களால் வன்முறையால் கொடுமைபடுத்தப்பட்டால்,கொல்லப்பட்டால், அது ஜனநாயகம் பாதுகாப்புக்கான செயல்கள்.

ஒரு வீரப்பனை தேடியே ஒரு இனமக்களை சித்திரவதைச்செய்தும்,அவர்களை பைத்தியகாரர்களாகவும்,ஊனமுற்றவர்களாகவும் மாற்றிவிட்ட இந்த போலிஸ் பயங்கரவாதம்.இன்று காட்டுவளங்களை கொள்ளையடித்து முதலாளிகளுக்கு கொடுக்க மாவோயிஸ்ட் என்று சொல்லி இந்தியாவின் பழங்குடிகள்,மலைவாழ்மக்கள்மற்றும் சில தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தொடுத்திருக்கும் அரசு பயங்கரவாத என்ற போர் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தாலே நெஞ்சு பதப்பதைக்குது.
ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் ஒவ்வொருவரும் இந்த நாவலை படிக்கவேண்டும்.
இந்த அரசு,அரசாங்கம் யாருக்காக இயங்குகிறது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

மக்களுக்காகதான் அரசு
அரசுக்காக மக்கள் இல்லை
இதை மக்கள் உணரும் நேரம் நிச்சயமாக கிழக்கு சிவந்தே தீரும்